தென் ஆப்பிரிக்கா, கேப்டவுன் கடற்கரையில் அளவுக்கு அதிகமாகத் திரண்டுள்ளது கடல் நுரை. கடல் அலைகளில் உருவாகியுள்ள நுரை காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு சாலை முழுவதும் பரவி, ரம்மியமான காட்சியை உருவாக்கியுள்ளது. வெள்ளைப் பனி படர்ந்து கிடப்பதைப் போல சாலை முழுவதும் பொங்கி வழியும் நுரையில் பொதுமக்கள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு வாரமாகவே பலத்த காற்றுடன், மழை பெய்து வருகிறது. மணிக்கு 70 – 100 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. கடல் அலையும் 10 அடி உயரம் வரை எழுந்துள்ளது. இதனால் நகரில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. நகரிலிருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரசாயனங்கள் கடலில் கலந்ததன் காரணத்தால் வழக்கத்துக்கும் மாறாக அதிகளவில் நுரை எழும்பி உள்ளது. குளிர்ச்சியான அட்லான்டடிக் கடலின் அலைகளிலிருந்து எழும் நுரை காற்றினால் சாலையை நோக்கி அடித்துச் செல்லப்படுகிறது. இதனால், சாலை முழுவதும் கடல் நுரைகள் பரவிக் கிடக்கின்றன. வெள்ளை நிறத்தில் பனித் துகள்களைப் போன்று காணப்படும் நுரைகளில் பொதுமக்கள் விளையாடி மகிழ்கிறார்கள்.
ஆளுயற எழும் நுரை அலைகளுக்கு மத்தியில் நின்று செல்பி எடுத்தும், அலைகளில் சருக்கியும் மகிழ்கிறார்கள் பொதுமக்கள். வழக்கமாகவே, கேப் டவுன் கடற்கரைப் பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் நீர்ச்சருக்கு, சூரிய குளியல் உள்ளிட்ட கேளிக்கைகளில் ஈடுபடுவர். தற்போது, இந்தப் பகுதியில் அளவுக்கு அதிகமாகத் திரண்டிருக்கும் கடல் நுரை பொதுமக்களை மேலும் மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது. ஆனால், ரசாயன கலப்பினால் உருவாகியுள்ள கடல் நுரை சுற்றுச் சூழல் பிரச்சனையையும் உடல் நலக் குறைபாட்டையும் உருவாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.