வாஷிங்டன்: சி-130ஜெ சரக்கு விமானத்திற்கு தேவையான உபகரணங்கள் உட்பட ரூ.675 கோடிக்கான பாதுகாப்பு கருவிகள், தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் தயாரிப்பான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ் சரக்கு விமானத்தை இந்திய விமானப்படை பயன்படுத்தி வருகிறது.
பேரிடர் காலங்களிலும், எல்லையில் வீரர்களையும் ராணுவ தளவாடங்களையும் கொண்டு சேர்ப்பதில் இந்த விமானம் சிறப்பான சேவையாற்றி வருகிறது. இந்நிலையில், சி-130ஜெ விமானத்திற்கு தேவையான துணை உபகரணங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளை வாங்கி அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கு அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் ஒப்புதல் அளித்த நிலையில், அந்நாட்டின் ராணுவத்தின் ஒரு அங்கமான, ராணுவ பாதுகாப்பு கூட்டு ஒத்துழைப்பு அமைப்பு (டிஎஸ்சிஏ) தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, மேம்பட்ட ரேடார் எச்சரிக்கை ரிசீவர், இரவு நேரத்திலும் பார்க்கக் கூடிய கண்ணாடிகள், ஜிபிஎஸ், கிரிப்டோகிராபிக் கருவிகள், லோடர்கள், துணை சாப்ட்வேர்கள் உள்ளிட்ட பல உபகரணங்கள் வாங்கப்பட உள்ளன. இந்த உபகரணங்கள் இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை பலப்படுத்தும் என டிஎஸ்சிஏ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடற்படை தின வாழ்த்து
1971ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போர் நடந்தபோது, கராச்சி துறைமுகத்தின் மீது இந்திய கடற்படை நடத்திய தாக்குதலை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.
நேற்று கடற்படை தினத்தையொட்டி, இந்திய கடற்படை வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய கடல் எல்லையை பாதுகாக்கும் கடற்படை வீரர்களை எண்ணி இந்த தேசம் பெருமை கொள்வதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டி உள்ளார்.