வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்ற அடுத்த 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதே தனது இலக்கு என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் ஒன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன், அடுத்த மாதம் பதவியேற்கவுள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முனைப்பாக உள்ள ஜோ பைடன், மருத்துவக் குழு ஒன்றையும் தற்போதே அமைத்துள்ளார். கொரோனா தடுப்பு தலைமை மருத்துவ ஆலோசகராக தொற்று நோய் நிபுணர் அந்தோணி காசினி நியமிக்கப்பட்டுள்ளார். தாம் பதவியேற்ற அடுத்த 100 நாட்களில் கொரோனா முற்றிலும் ஒழிந்துவிடாது என தெரிவித்துள்ள பைடன், ஆனால் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி பள்ளி உள்ளிட்டவற்றை திறப்பதே தனது இலக்கு என பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பைடன்,முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்துதல், தடுப்பூசி முகாம்கள், பள்ளிகள் திறப்பது. இதுவே எனது முதல் 100 நாட்களின் இலக்கு.
முதல் 100 நாட்களில் குறைந்தபட்சம் 10 கோடி தடுப்பூசிகளை அமெரிக்க மக்களுக்கு போட வேண்டும் என குறிப்பிட்டார். இதனிடையே பைடன் அறிவிப்பு குறித்து தற்போதைய அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி அறிமுகம் தொடர்பாக தங்கள் நாட்டு அரசு மேற்கொண்ட மேம்பாட்டு பணிகளால் அடுத்து வரும் பைடன் அரசு ஆதாயம் அடையவுள்ளது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.