கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பிடியில், உலகின் பிற எந்த நாட்டையும் விட அமெரிக்கா மிக மோசமாக சிக்கி உள்ளது. அங்கு நேற்று மதிய நிலவரப்படி 1 கோடியே 74 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதித்து இருப்பதாகவும், 3 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்து இருப்பதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அங்கு பைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை மருத்துவ பணியாளர்களுக்கும், முதியோருக்கும் செலுத்தும் பணி அங்கு தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில், மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள ‘எம்ஆர்என்ஏ-1273’ என்ற தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நேற்று முன்தினம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. இது கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிற அமெரிக்காவுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த தடுப்பூசியின் 20 கோடி டோஸ்களை வாங்குவதற்கு அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அவற்றில் தற்போது சுமார் 60 லட்சம் டோஸ்கள் வினியோகத்துக்கு தயாராக இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மட்டுமின்றி அதிகபட்சமாக 94 சதவீத செயல்திறன் கொண்டது என்பது தெரிய வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்திருப்பதற்கு அந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பைசர்-பயோஎன்டெக் மற்றும் தற்போது மாடர்னா என இரு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது ஒளிமயமான நாட்கள் முன்னதாகவே உள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இது மேலும் ஒரு மைல் கல் ஆகும்.
இந்த தடுப்பூசியை வழங்க உதவியதற்காக விஞ்ஞானிகளுக்கும், மருத்துவ நிபுணர்களுக்கும், சோதனைகளில் பங்கேற்றவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நான் திங்கட்கிழமையன்று (நாளை) பகிரங்கமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்போகிறேன். இவை அனைத்தையும் செய்வதற்கும், விரைவாக செயல்படுவதற்கும் நம்மிடம் ஆதாரங்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.