வாஷிங்டன்,
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2 கோடியே 54 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க ஒரேவழியாக உள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
இதற்கிடையில், கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துப்பொருட்கள் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவுக்கு 6 கோடி தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்க வேண்டும் என்று இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ரேவ் ஜெசி ஜாக்சன் ஆகியோர் அதிபர் ஜோ பைடனிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பாக இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, உலக நாடுகளுக்கு 6 வாரங்களில் 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.