ஈரானில் தடுப்புக் காவலில் மரணித்த 22 வயதான மஹ்ஷா அமீனியின் மரணத்தைத் தொடர்ந்து அந்நாட்டு ஒழுக்க நெறி பொலிஸுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
ஹிஜாப் விதியை மீறியதாக கைது செய்யப்பட்ட அமீனியின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் வலுத்துள்ளன.
அமீனியின் மரணத்திற்கு ஒழுக்க நெறிப் பொலிஸார் பொறுப்பாவதாக அமெரிக்க கருவூலம் குறிப்பிட்டுள்ளது. ஈரானிய பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை, அதேபோன்று அமைதியான ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்களின் உரிமையை மீறியதற்காக இந்தத் தடை விதிக்கப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்தத் தடை மூலம் இலக்கு வைக்கப்பட்ட தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் அமெரிக்காவில் உள்ள சொத்துகள் முடக்கப்படுவதோடு, அவர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அமெரிக்க பிரஜைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
2018இல் ஈரான் அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விலகியதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தடைகளை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.