உக்ரைன் – ரஷ்யா போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல உக்ரைனுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஏராளமான உதவிகளை வழங்கி வருகின்றன.
அவ்வாறே, உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்கத் தயாராக இருப்பதாக டென்மார்க் தற்போது அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் இராணுவ பாதுகாப்பு அமைச்சர் டிரோல்ஸ் லண்ட் பால்சன் தெரிவித்துள்ளதாவது, “உக்ரைன்-ரஷ்யா போரில் போர் விமானங்களின் பங்களிப்பை மறுக்க முடியாது. எனவே, ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான உக்ரைனின் தற்காப்புக்கு உதவ எப்-16 ரக போர் விமானங்களை வழங்க டென்மார்க் அரசு தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் “உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்கள் வழங்கப்படுமா?” என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “இப்போதைக்கு அது சாத்தியமில்லை” என அவர் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.