அமெரிக்காவின் யூட்டா (Utah) மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றில் 32 வயது இளைஞன் மரணித்துள்ளார்.
இந்த இளைஞனின் மரணம் தொடர்பில் 9 வயதுப் பிள்ளை கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ள அமெரிக்க பொலிஸார், அந்தப் பிள்ளை சிறுவனா அல்லது சிறுமியா மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர்.
மரணித்தவரின் அடையாளமும் வெளியிடப்படவில்லை.
எனினும், கைதுசெய்யப்பட்ட அப் பிள்ளை மரணித்த இளைஞனின் உறவினர் என்று AFP செய்தி வெளியிட்டுள்ளது.
தலையில் துப்பாக்கிச் சூடு பட்டு படுகாயமடைந்த அந்த இளைஞன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். எனினும், வைத்தியர்களால் அவரைக் காப்பற்ற முடியவில்லை.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள 9 வயதுப் பிள்ளை மீது கொலைக் குற்றச்சாட்டு கொண்டுவருவது பற்றித் தாங்கள் பரிசீலிப்பதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொகையை விடத் துப்பாக்கிகள் அதிகமாக உள்ள அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் துப்பாக்கிச் சூட்டால் மரணிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.