வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை உறுதி செய்ய ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ரயில் மறியலை தடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தில் ரயில் பாதுகாப்புக்காக கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் அருண் குமார் தெரிவிக்கையில், “விவசாயிகளின் ரெயில் மறியல் தொடர்பாக நாங்கள் உளவுத்தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருகிறோம். இதில் பஞ்சாப், அரியானா உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களும் வேறு சில பகுதிகளையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.
இந்த போராட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். அத்துடன் கட்டுப்பாட்டு அறையும் திறக்க முடிவு செய்துள்ளோம். அனைவரும் அமைதியை கடைப்பிடிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.