வேளாண் திருத்த சட்டமூலங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இது தொடர்பில் இங்கிலாந்து நாடாளுமன்றில் விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுபோன்ற கலந்துரையாடல் மற்றொரு ஜனநாயக நாட்டின் அரசியலில் தலையிடுவதைக் குறிக்கும்.
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை தவறாக சித்தரிப்பதன் மூலம் வாக்கு வங்கி அரசியலில் இருந்து விலகி இருக்கவேண்டும் என வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்க்லா இங்கிலாந்து தூதுவரிடம் தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருவதற்கு பல்வேறு நாட்டினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து இங்கிலாந்தின் தொழிற்கட்சி மற்றும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவசாயிகளை இந்தியா எதிர்ப்பாளர்களைப்போல் நடத்தியதற்காகவும், பத்திரிகைகள் மீது ஒடுக்குமுறை செய்ததாகவும், இணையம் நிறுத்தப்படுவதாகவும், ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.