வணக்கம் லண்டனில் விபரணக் கட்டுரை பகுதியில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்ற திரு.பத்மநாபன் மகாலிங்கம் அவர்களின் வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி 28 அத்தியாயங்களைக் கடந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வாசகி யசோதா.ப என்பவர் இக் கதை பற்றிய ஓர் விமர்சனத்தை வழங்கி இருந்தார். அதை கீழே காணலாம்.
27 அத்தியாயங்கள் வரையான அதிபர் ஜயா மகாலிங்கம். பத்மநாபன் அவர்கள் எழுதி வரும் மூன்று கிராமங்களின் கதையை தொடர்ந்து ஆர்வத்தோடு வாசித்து வருகிறேன்.
முன்மாதிரியான, தனித்துவமான ஒரு முயற்சி இது. ஒரு கிராமத்தின் உருவாக்கத்தை அதன் வரலாற்று நாயகர்களே கண்கூடாக கண்டதையும் வாழ்ந்ததையும் அனுபவித்ததையும் அந்த மண்ணில் நின்று எழுதுவதென்பதும் அதை படிக்க கிடைப்பதென்பதும் மண்ணுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
தொடர்ந்து இந்தத் தொடரை படிக்க ஆர்வமாக இருக்கிறது.
நல்லதொரு இணையத்தளத்தில் தரமான வடிவமைப்போடும் இலகுவாகப் படிக்கத்தக்கதாக வரும் முற்பதிவுகளின் வரிசைகளோடும், எழுத்துப் பிழைகள் இல்லாத சிறந்த நேர்த்தியான உழைப்போடும், பொருத்தமான படங்களோடும் பதிவுகள் வெளிவருவது மேலுமொரு சிறப்பு.
அதுநிற்க, குறிப்பாக ஓவியங்கள் மிகுந்த உயர்வை (up lift) ஜயா அவர்களின் வசனங்களுக்கு வழங்குகின்றன. இப்பொழுதெல்லாம் பலரும் ஓவியங்களின் தாற்பரியத்தை மறந்து போனவர்களாக இணைய வழிகளில் இலகுவாகக் கிட்டிவிடும் பிரதிகளில் நம்மை திருப்திப்பட நிர்ப்பந்தாக்கப் பட்டிருக்கிற இந்த நவீன சூழலில் இந்த வரலாற்றுப் பதிவுகளுக்கென வரையப்படும் ஓவியங்கள் நம்மை அம்புலிமாமா மனநிலைக்கு பின்னோக்கி கொண்டு சென்று விடுகின்றன. அந்தக்கால நினைவுகளை அந்தக்கதை மாந்தர்கள்; வரலாற்று நாயகர்கள் தந்து விடுகிற போதும் ஓவியங்கள் அவற்றுக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்கின்றன என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
மிக நன்றாகவும் சுவாரிசமாகவும் சிறப்பாகவும் தரமாகவும் தனித்துவமாகவும் நடை போடும் மூன்று கிராமங்களின் கதையை ஒரு வித பெருமித உணர்வோடு வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
இவற்றை சிந்தித்து சாத்தியப் படுத்தும் எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்.
செங்கை ஆழியான் ஈழத்தில் எழுதிய சில வரலாற்று நாவல்கள், கல்கி எழுதிய சோழர்கால வரலாற்று நாவல்கள் மற்றும் சாண்டில்யனின் வரலாற்று புதினங்கள், ராகுல வின் மானுட வரலாற்றுப் புதினங்கள் வரிசையில் இது ஒரு தனித்துவமான ஒரு புதுப் பாதை. அதன் அழகு அம் மண்ணின் எளிமையிலிருந்து தொடங்குகிறது. அது அந்தத் தனித்துவத்தோடு நடைபோடும் அழகே வன்னியின் அழகுமாகும் என்பதே அதன் சிறப்பு. இனி வரும் பரம்பரைக்கு நாம் விட்டுச்செல்லும் ஒரு கால கட்ட வாழ்க்கை முறையின் கண்ணாடியாக இது அமையும்.
.
– வாசகி யசோதா.ப | அவுஸ்திரேலியா