உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தை பாதுகாக்க தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதற்கு பொதுமக்கள் எழுச்சிகரமான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அப் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்றைய தினம் உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வந்த தொல்பொருள் திணைக்களத்தினரும், பொலிசாரும் மக்களின் எதிர்ப்பினால் திரும்பிச்சென்றிருந்தனர்.
எனினும் அகழ்வு என்ற பெயரில் அவர்களால் திட்டமிடப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இனி ஒருபோதும் அவர்கள் கைவிடப்போவதில்லை என்பதை எமது மக்கள் புரிந்துகொண்டு தொடர்ச்சியாக ஆலய முன்றலில் நடைபெறவுள்ள எதிர்ப்புப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு போராட்ட ஏற்பாட்டுத் தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அண்மைய காலத்தில் தமிழர்களின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பௌத்த சிங்களமயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தொல்லியல் திணைக்களம் இலங்கை அரசு மற்றும் இராணுவத்தின் துணையுடன் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.