இதுதான் போராளிகள்?
நாவலில மிகமுக்கியமான ஒரு பாத்திரம் இருக்கு…. “அரவந்தி”
அப்போது கூட இருந்த போராளிகளுக்கு அது என்ன “அரவந்தி” எண்டு யோசின.
அப்ப அக்காவோட பிரிவு போராளி ஒராள் சொல்லுது “ அது அக்கா நீங்கள் தாமரை பூ மாதிரி இருக்கிறியளல்லோ.. அதவிட தாமரைக்கு அரவிந்தம் எண்டும் ஒரு பேரு இருக்கு தானே…. அதான்
உடன அந்த பெண் போராளி அக்கா “பொய்க்கோவத்தோட சொல்லுறா” பாத்தியள! பெண்கள மலர்களாக்கி முகர்ந்து அனுபவிக்கிற ஆணாதிக்க புத்தி இன்னும் போகேல்ல” .
அந்த அக்கா அத விளையாட்டா தான் சொன்னவா… ஆனா மற்ற போராளிகள் உண்மையாவே தங்கள அக்கா பிழையா நினைச்சிற்றாவோ எண்டு மனமுடையேக்க
அந்த பெண் போராளி சொல்லுறா…
“ ஒரு விடுதலைப்போராளியை இன்னொரு பெண் போராளி கடைசிவரையில் அப்பிடி நினைக்க மாட்டாள்”
யுத்த ஞானியாக….
பொதுவா இந்த நாவல் அ வாசிச்ச பிறகு சாதாரண ஒரு ஆள் “யுத்தகளத்து கடைநிலைச்சிப்பாயோட” அறிவை எண்டாலும் பரிபூரணமாக பெற்றிருப்பான்…
துருப்புக்காவி,டாங்கி, எல்லாம் புது வகையான போர் வாகனங்கள். டாங்கி எண்டது சுடுகுழல் கொண்ட நகரும் பீரங்கி.
இந்த நகரும் பீரங்கி எண்டா ஈரக்குலை நடுங்கும். ஆனா அந்த டாங்கியோட சுடுகுழல தாக்கிற்றா அவ்வளவு பெரிய யுத்த வாகனம் செயலற்று போயிரும்.
யானைக்கு எறும்பு பகை போல “ இந்த நாவல் அ படிக்கும் போது நிறைய புதுவிசயங்கள படிக்க கிடைக்கிறது மலைக்க வைக்கும்.
அதை விட பாம்பு வங்கர். அதை உருமறைப்பு செய்யும் முறை, கண்ணிவெடிகளை தாக்கிறவர்களோட உருமறைப்பு, எதிரி எந்த பகுதியில தாக்குவான். செல் குத்தினால் அதை அறியுற முறை, பல போராளிகள் நிற்பது போல தோற்றம், போலியான் கூடாரங்கள்,
வந்த இடத்தில நித்திரயே?
அரவந்தி உட்பட போராளிகள் தாக்குதலுக்காக போறினம். போகின்ற பொழுது ஒரு இடத்தில ஆமி வருற அசுமாத்தம் இருக்க, போராளி ஒராள் பனையிட பக்கமா மறைவாகிறார்.
ஆமி போகவிட்டு அரவந்தியக்கா வந்து கேக்கிறாங்க “ வந்தாப்போல வெட்டையுக்க நித்திரையாய்ப் போட்டியளெண்ணடல்லே யோசிச்சிற்றன்……..
திருப்பி அந்த போராளி சொல்லுறார். “பனையில ஏறினாப்போல கள்ள குடிச்சுக்கொண்டு இருந்திற்றன்…”
ஒரு போராட்ட களத்தில போராளிகளோட சம்பாஷணைய பாத்திங்களா எவ்வளவு துள்ளல் துடிப்புக்களோட நகருது எண்டு.
தலைவனது பிரசன்னம்
தலைவனை கண்டதும் போராளிகளிடம் ஒரு உத்வேகத்தை ஊட்டி எவ்வித அர்ப்பணிப்புகளுக்கும் அவர்களை தயாராக்குவதை இளங்கோ பல சமயங்களில் அவதானித்திருக்கிறான்.
தனக்குள்ளும் அப்படியான ஒரு உணர்வு உள்ளதை அவனால் நிராகரிக்க முடியவில்லை….
தனிமனிதர் வழிபாடு என விமர்சனங்கள் எழுந்தபோதிலும் எதற்காக இவ்வளவு ஆழமாக நேசிப்பு வரக்காரணம் என்றால் தலைவனது வழிநடாத்துகையும் பற்றுறுதியும்…..
ஆணும் பெண்ணும் பக்கத்தில இருந்தாலே பத்திக்கொள்ளும் என்பார்கள். ஆனால் இந்நாவல் போராளிகளுக்குள்ளும் காதல் இருந்தது. ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கின்ற பொழுது…..
தானே முதலில் வீரச்சாவடைய வேண்டும். மாவீரராக கிடைக்க குடுத்துவைச்சிருக்கோணும்…
அவள் காயப்பட்டிருக்கேக்க என்ன விட்டுட்டு நீங்க எல்லாரும் சண்டைக்கு போறியள் என கோவிப்பது என எல்லாமே அவர்கள் ஒரு இலட்சியக்காதல் கொணடவர்கள் எண்டத வலியுறுத்துது.
அதேமாதிரி “ போராளி ஒருவரை பார்த்து” நீங்களும் ஒரு பிள்ளைய வளைச்சுப்போடுறது என ஒரு தாத்தா கேலியாக கேக்க எனக்கு ஏற்கனவே மனிசி இருக்கு எண்டு துவக்க தொட்டு காட்டுறது.. இது எல்லாமே அவர்கள் பெண்மேல் மோகம் கொண்டவர்கள் அல்ல.. தன்னை சுமந்த மண்ணினை மீட்கும் தாகம் கொண்டவர்கள் என்பதை உணர்த்துகிறது.
தளபதிகள் இவ்வாறானவர்களா?
1)கடல்வழியாக போராளிகள் தரையிறங்க வேண்டிய கட்டாயம். சில போராளிகளுக்கு அதுவே முதற் கடற்பயணம். சில போராளிகள் சத்தியெடுத்தனர். அதில் ஒரு போராளி “ரோகிணி” சத்தியெடுத்த களைப்புச்சோர்வால் சுருண்டாள். அவளை வாரியெடுத்து தன்பிள்ளை போல் அவளது தளபதி மடியிலெடுத்தாள்….. பக்கம் (36)
வள்ளத்துக்கு பின்னிருந்த போராளி “அக்கா! உண்மையில தளபதி மட்டுமில்லையடி! எங்கட தாய்!”
கோட்டெக்ஸு மருத்துவமா?
இப்போ சண்டை தொடங்கிற்று. அரவந்தி அக்கா காயப்பட்டுட்டாங்க. ரெண்டு கால்களும் சிதைவடைஞ்சுபோகுது. ரத்தம் பீறிட்டு பாயுது. அதை தடுக்கிற மருத்துவம் என்ன எண்டா பெண்கள் மாதவிடாய் காலங்களில பாவிக்கிற கோட்டெக்ஸ்.
எப்பிடியெல்லாம் கஸ்ரங்களை தாண்டி ஒரு பெரிய சமரின பெண்கள் வழிநடாத்தினாங்க எண்டது நினைக்கவே வியப்பு தான்.
மிரட்டப்பட்ட மாணவர்கள்?
மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்க இருக்காங்க. அவங்களை விடுவிக்க கோரி நாவற்குழி முகாமுக்கு முன்னுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக பொடியள் ஆரப்பாட்டம் செய்றாங்க.
கொஞ்ச நேரத்துக்கு பிறகு மாணவ பிரதிநிதிகள உள்ள கூட்டிற்று போயிற்றாங்க. அங்க போயிற்று உயர் அதிகாரி சொல்லுறார். அங்க மக்கள் யாருமே இல்ல எண்டு. உடன மாணவ பிரதிநிதி ஒருவர் “ என்ட அம்மா அப்பாவும் அதுக்குள்ள தான் மாட்டுப்ப்ட்டு இருங்கினம் எண்டு சொல்ல”
உடன உயரதிகாரி “சட் அப்” எண்டது மாத்திரமில்லாம
பக்கத்தில நிண்ட சிப்பாய் “செம்மணி தெரியுமா.? அங்க போய்… மண்கீழ தூக்கம் போட ஆச வாணாம்” எண்டு கடுந்தொனியெடுத்தான்.
அனுமதியெடுக்கும் முறையில்?
எவ்வளவு நீண்டதொரு போராட்டம் இதில எந்த சரிவுகளும் இல்லாம நிலைக்க என்ன காரணம்? வழிநடத்தல்!
இளங்கோ, சரசு எண்டு ரெண்டு போராளிகள் இருவருக்கிடையிலையும் ஒருவருக்கொருவர் விருப்பம் இருக்கு. அப்போ.. ஒருமுறை சரசுவை சந்திக்க போகும் போது இளங்கோ தன்னோட தளபதியான விக்கிரமன் ட்ட அனுமதி பெற்று போறாரு.
இப்பிடி போய் பங்கர் வாசலில சரசுவ கண்டதும்…. சரசு உடன அக்கா எண்டு தன்னோட தளபதியிட்ட அனுமதிக்காக கூப்பிடுறதும். அதேநேரம் இளங்கோ அங்க வருவார் அவருக்கு அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. என தனது தளபதி கூறுவதும்
அந்த வழிநடாத்தல், தொடர்பாடல் இது எல்லாமே பிரமிப்பான விடயம்.
மீனவர்களது வாழ்வு?
தளபதி விக்கிரமன் ஒருவனை பாராட்டுறான். அப்போது அவன் சொல்லுறான் “ தம்பி, எங்களுக்கும் போராட்டமும் சாவும் புது விடயங்களில்லை…. அலையோடையும் காத்தோடையும் போராடித்தான் எங்கட வாழ்க்கை கடல கழிக்கிறம். நாங்கள் வெண்டால் மீனோட வருவம். கடல் எங்களை வெண்டால் அலையோட பிணமா மிதப்பம்.”
மீனவனது வாழ்வு!
துரோகத்தெதிர் ஈழத்தமிழினம்?
பரியாரியப்பு எண்டவர் மிக கலகலப்பான ஆள். வயது போனவரும் கூட. அவரோட ஊர ஆமி புடிச்சிர்றாங்க. அப்போ அவரு கடுப்பாகி எங்க ஊரில நிம்மிதியா வாழ விடாதவங்கள நானும் நிம்மதியா இருக்க விடமாட்டன் எண்டு இயக்கத்துக்கு வாறாரு….
வந்து கொஞ்ச காலத்தில ஒரு செய்தி வருது… “ உங்கட ஊரவன் ஒருத்தன் போராளியளின்ர காலடித்தடத்த வச்சு போராளியளை காட்டிக்குடுத்திட்டான்”
உடனே பரியாரியப்பு கோவப்பட்டு “ ஒருத்தன் போராளிகளை காட்டிக்குடுக்கிறானெண்டால் அவன் எங்கட ஊரவன் மட்டுமில்லை, எங்கட இனமே இல்லை, ஏன் மனுஷ குலம் கூட இல்ல…
எம்மினத்து துரோகிகளுக்கு ஒரு குடியானவனது பதில்….
சிலிர்ப்பு….?
சரசு, இளங்கோ எண்டு இருபோராளிகள் மனமொருமித்த காதலர்கள் எண்டு கூறும் நாவல்..
ஒரு அத்தியாயம் முடியும் போது “சரசு தங்கியிருந்த பங்கருக்கு அருகாமையில் விமானக்குண்டு வெடித்ததில் பங்கரின் மேலிருந்த பனஙகுற்றிகள் சில அடிகள் தூக்கியெறியப்பட்டு மண்மூட்டைகளும் சரிந்து விழுந்தன…..
நாவலின் ஓர் அத்தியாய முடிவில் இது வருவதனால் அடுத்து என்ன நடக்கப்போகுமோ எண்ட தவிப்பை வாகருள் விதைத்துச்செல்வது….
நாவலிற்கு அழகு.
கஞ்சிக்கதை…?
கஞ்சி எண்டா முள்ளிவாய்க்கால் தான் எண்டு நினைக்கிறது வழைமை…காரணம் அறியாமை….ஆகமொத்தம் அனைவரும் முட்டாள்.
சண்ட நடக்கிது கண்ட கண்ட இடத்திலயெல்லாம்…. இப்ப சாப்பாட்டுக்கு என்ன வழி.
வேற என்ன கஞ்சி தான். முள்ளிவாய்க்காலில மட்டும் இல்ல ராசா. தமிழனோட கஸ்ரத்தில எல்லாமே கைகொடுத்தது உந்த கஞ்சி தான்.
கையில அரிசியிருக்கோ இல்ல… எங்கால அரசி. மக்கள் கைவிட்ட வீடுகளில எப்பன் அரிசி இருக்கும்….
இது களவோ?
இல்ல!
தேசத்தோட குழந்தைகளுக்காக தானே அவங்கள் தங்கட உயிர குடுக்கிறாங்கள். ஒரு வயிறு கஞ்சி களவெண்டா எங்கட உறுப்புகள வெட்டி விக்கிறவன என்ன சொல்ல?
பனமட்டை வைத்தியம்…?
பனங்குத்தி தோள்மூட்டில விழுந்ததால போராளி சரசுவோட கை களண்டு போச்சு.
அதுக்கு வைத்தியம்..?
“முழங்கை மூட்டு மட்டும் பனமட்டை வச்சு கையும் பனமட்டையும் துணிகளால வரியப்பட்டு கழுத்தில மாட்டி தொங்கவிட்டிருந்திச்சு….
இப்ப நவீனம். அதனால பனமட்டை உதாசீனம்
அந்த காலத்தில பனமட்டைய வச்சு தான் எங்கட அண்ணாக்கள் அக்காக்கள் போராடினவ…
ஏன்டா பொய் சொல்றிங்க?
போராளிகள் தரப்பில 200, 300 ஆக்கள் இறந்திற்று எண்டு ஆனையிறவு கட்டளைத்தளபதி அடிக்கடி கொழும்பு தலைமையகத்துக்கு அறிவிச்சுக்கொள்றார். ஆனா பின்னடைவுகளே அதிகமா இருக்கே உண்மையில நீங்க அழிக்கிறீங்க தானா எண்டு கொழும்பு ல இருந்து உயரதிகாரிகள் இங்க வந்து பாக்கிறினம்.
அப்போது ஆனையிறவு கட்டளைத்தளபதி சொல்றார். நாங்கள் இத்தனை கூடாரங்கள அழிச்சிருக்கம். இதில எப்பிடியும் 150 க்கு மேல போராளிகள் செத்திருப்பினம் எண்டு.
உடன உயர் அதிகாரி வழிமறிச்சு சொல்லுறார். இது உண்மையான கூடாரச்கள் இல்லை. இது உங்களை ஏமாத்த எண்டு அதை நிரூபிக்கிறார்.
அவமானத்தில, இது முதலே தெரிஞ்சிருந்தா நாங்கள் முதலே அடிச்சு புடிச்சிருப்பம் எண்டுறார். ஆனையிறவு கட்டளைத்தளபதி.
ஆகமொத்தத்தில “ இலங்கை அரச தரப்பால வெளியிடப்படுகின்ற செய்திகளோட தரமும் நாணயமும் உப்பிடித்தான் இருக்கு…
டாங்கியை தகர்த்த ஈழப்பெண்?
ஆனையிறவ புடிக்க புது இராணுவ தளபதி நியமிக்கப்படுறார். “புதுவிளக்குமாறு நல்லா கூட்டும் எண்டாப்போல” போரை நடத்துறார்.
குயிலினி, இராணுவம் தன்னோட பகுதியை கடக்க கூடாதெண்டு சன்ன மழையை சகசமா குடுத்தாள்.
பின்னால டாங்கி வந்தத இப்ப தான் பாக்கிறாள். பங்கருக்குள்ள பதுங்கி டாங்கிக்கு பின்னால் ஓடுகிறாள். டாங்கியின் பின்பக்கத்தால் பாய்ந்து ஏறி கைக்குண்டை மேல் ஓட்டையால் உள்தள்ளி டாங்கியை சுக்குநூறாக்கினாள்….
பெண்வீரம்!!
எப்படி ஜெயிக்கிறார்கள்?
அன்று காலை , கொழும்பு ஊடகமொன்றில “ஆயிரம் போராளிகளிடம் தோல்வியடைந்த பத்தாயிரம் படையினர்” என ஒரு செய்தி வந்திருந்தது.
எப்படி இது நடந்தது. உண்மையில இது நடந்தது தான். ஆனையிறவு கட்டளைத்தளபதியே சொல்கிறான். பதினைஞ்சாயிரம் ஆக்கள் ஆயிரத்து ஐநூறு போராளிகள் அடிச்சு கலைக்கிறாங்கள் எண்டா அது உங்கட திறமையின்ம தான்….
“எங்கட பொடியள் வீரத்தினால் மட்டுமில்லை. மூளைய பாவிக்கிறதிலையும் விண்ணர் தான்!
கி. அலெக்சன், யாழ்பல்லைக்கழகம்