இலங்கையில், பிரிட்டன் சுற்றுலாப் பயணியைக் கொன்றுவிட்டு, அவரது தோழியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அந்நாட்டின் ஆளும் கட்சித் தலைவர் உள்பட 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் கடந்த 2011ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த, பிரிட்டனைச் சேர்ந்த குரம் ஷேக் என்ற சுற்றுலாப் பயணி கொல்லப்பட்டார். அவரது தோழி விக்டோரியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக, தங்கலே நகர கவுன்சிலின் தலைவரும், அதிபர் மஹிந்த ராஜபட்சவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுள் ஒருவருமான சம்பத் புஷ்பா விதனபதிரன உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட சம்பத் புஷ்பா விதனபதிரன, கடந்த ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை அடுத்து அந்த வழக்கில் சர்ச்சை எழுந்தது. அதையடுத்து மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை முடியும் வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், சம்பத் புஷ்பா விதனபதிரன மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கும், அவரது கூட்டாளிகள் 3 பேருக்கும் 20 ஆண்டு சிறை தண்டனை அளித்து உயர் நீதிமன்ற நீதிபதி ரோகிணி வால்கமா வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்