செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

3 minutes read

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைப்பதற்காக தி.மு.க. மூத்த தலைவரான டி.ஆர்.பாலு எம்.பி. ஏற்கனவே டெல்லி சென்றுள்ளார்.

தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (17-ந் தேதி) காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்கிறார். டெல்லி சென்றடைந்ததும் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதன் பின்னர் அன்று காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் அவர் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

17-ந் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின் போது பிரதமர் அலுவலக அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும் உடன் இருப்பார்கள்.

மோடி-மு.க.ஸ்டாலின் இடையே நிர்வாக ரீதியாக நடைபெறும் இந்த சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நீடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நலன்கள் தொடர்பான திட்டங்கள் பற்றி பிரதமருடன் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை பெறுவது உள்ளிட்ட 25 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் அளிக்க உள்ளார். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்பது போன்ற கோரிக்கைகளையும் பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் முன்வைக்கிறார்.

இதன் பிறகு பிரதமர் மோடியும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனியாக சந்தித்து பேசுகிறார்கள். இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் வரை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதன் பிறகு மறுநாள் (18-ந் தேதி) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்து வருவதற்கு தனது சிறப்பு பாதுகாப்பு படையில் உள்ள புல்லட் புரூப் காரை மோடி அனுப்பி வைக்க இருப்பதாகவும் அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு தமிழக முதல்- அமைச்சர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் டெல்லி சென்று இருந்தபோது இதுபோன்ற புல்லட் புரூப் காரில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் பிறகு தமிழக முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலினுக்கு இந்த சிறப்பு கவுரவம் அளிக்கப்படுகிறது.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைப்பதற்காக தி.மு.க. மூத்த தலைவரான டி.ஆர்.பாலு எம்.பி. ஏற்கனவே டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் மூத்த அமைச்சரான துரைமுருகன் இன்று டெல்லி செல்ல உள்ளார். இருவரும் இணைந்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க உள்ளனர்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அவர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் பற்றி அளித்த பேட்டி வருமாறு:-

டெல்லி செல்லும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17-ந் தேதி காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அதற்கு மறுநாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார்.

இதையொட்டி நானும் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளேன். மு.க.ஸ்டாலின் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More