கதிரவன் கலையும் நேரம் கண்கள் சிமிட்டிட
யன்னலோர ரயில் பயணம்
மீட்டிடும் மெல்லிய ரணங்களை
ரசித்தபடி செல்கிறது.
இணையாத தடங்களை மிதித்தபடி
மீட்டிடும் நியாபகங்கள்
தேன் சிந்திய நினைவுகளை
கண்ணீர் சிந்த வைக்கும் பயணம்
பற்றாத பாசமும் நூலாய் கோர்க்கும்
யன்னலின் முகம் சாய்த்து மென்காற்று
முகம் நீவிட கண்மூடியே கனவுலகம் செல்லாதோர் எவருண்டு
இயற்கையும் இணைந்தே பயணிக்கும்
பாழ்பட்ட பகையெல்லாம் பட்டதும்
தட்டியே செல்லும்-அவனோடு
மறைக்கப்பட்ட ரணங்களை அள்ளித்தருவதில்
அலாதிபிரியம்
யன்னலோர பயணம் அதனோடு செல்லும்
மெல்லிசையும்
பொற்கால புலம்பலும் புன்சிரிப்பாய்
உதடோரம் உரசிடும்
சில்லென்ற காற்றும் சிறைபிடிக்கும்-உடலை
வருடியே வாட்டிடும் வர்ணஜால
சீண்டல்கள்
கதிரவன் கைகளை மென்பனி போர்த்திடவே
பொழுதுகளும் புகார் மோகம் புரட்டிடுமே
தெவிட்டிடாத பலர் நினைவுகளை
சுமந்த படி-தித்திக்கும்
யன்னலோர ரயில் பயணம்.
கேசுதன்