சீனாவில் கடந்த ஆண்டு, தீவிரவாதச் செயல் உள்பட பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க மனித உரிமை அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவிலிருந்து செயல்படும் மனித உரிமை அமைப்பான துய் ஹுவா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஆண்டு சீனாவைத் தவிர்த்து பிற நாடுகளில் மொத்தம் 778 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விவரங்கள் தொடர்பாக சீனா ரகசியம் காத்து வருவதால், அது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும், எங்களின் முயற்சியால், மரண தண்டனை குறித்த விவரங்களை சீனாவைச் சேர்ந்த நீதித்துறை அதிகாரி ஒருவரிடமிருந்து பெற்றுள்ளோம். சீனாவில் 2013-ம் ஆண்டு மட்டும் 2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது 2012-ம் ஆண்டை விட 20 சதவீதம் குறைவாகும்.