சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் ஏராளமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை ஆண்டுதோறும் உரிய படிவத்தில் தாக்கல் செய்து, அரசுக்கு வழங்க வேண்டும்.
அப்போது பரம்பரை வழியாக வந்த அசையா சொத்து, சொந்தமாக வாங்கிய அசையா சொத்து, குத்தகை அல்லது அடமானத்தில் வந்துள்ள அசையா சொத்து (தனது பெயரில் அல்லது குடும்ப உறுப்பினர் அல்லது மற்றவர்களின் பெயரில் இருந்தாலும்) பற்றிய விவரங்களை சொத்து விவர அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். இதை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது நடைமுறை. அந்தவகையில், நடப்பாண்டிற்கான விவரங்களை அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் கடிதத்தில், ‘அரசால் பரிந்துரைக்கப்படும் படிவத்தில் ஒவ்வொருவரும் தங்களது முழு சொத்து விவரங்களை அளித்து வருடாந்திர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதில் பரம்பரையாக பெற்ற, சொந்தமான, கையகப்படுத்தப்பட்ட, குத்தகை அல்லது அடமானத்தில் வைத்திருக்கும் சொத்து, அவரது பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ வைத்திருக்கும் சொத்து அல்லது வேறு எந்த நபரின் பெயரிலோ வைத்திருக்கும் சொத்தின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி ஒவ்வொருவரும் அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் வருடாந்திர அசையா சொத்துக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிகளுக்கு இணங்குவதில் உறுப்பினர்கள் தவறினால் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுப்பதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய அரசானது 2017ம் ஆண்டு இணையதளம் மூலமாக சொத்து விவரங்களை தாக்கல் செய்யும் வசதி அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி தங்களது சொத்து விவரங்களை மின்னணு முறையிலோ அல்லது கைமுறையாக எழுதப்பட்டதை ஸ்கேன் செய்தோ பதிவேற்றம் செய்ய முடியும். அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதியுடன் தானாகவே இந்த ஆன்லைன் வசதி மூடப்பட்டு விடும்.
எனவே பல்வேறு துறைகளில் பணிபுரியும் அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் 2021ம் ஆண்டிற்கான பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவின்படி ஆன்லைனில் தங்களது விவரங்களை சமர்பிப்பதை உறுதி செய்ய தேவையான அறிவுறுதல்களை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே, இதன்படி நான் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடையும் ஆண்டிற்கான ஒன்றிய அரசு பரிந்துரைத்த படிவத்தில் 2022 ஜனவரி 31ம் தேதி என நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மீது நடவடிக்கை
செய்தி மக்கள் தொடர்புத்துறை அனைத்து அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்: அனைத்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் அலகு அலுவலகங்களின் அலுவலர்கள், தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் ஒவ்வொரு பணியாளர்களின் சொத்து விவரங்களை தெளிவாக குறிப்பிட்டும், அவ்விவரங்களை அந்தந்த பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில் பதிவு செய்தும் சம்பந்தப்பட்ட பிரிவிற்கு தனித்தனி கடிதம் வாயிலாக 19.11.2021க்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால், சில மாவட்ட அலுவலகங்களில் சில பணியாளர்களின் சொத்து விவரம் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. எனவே, அனைத்து மாவட்ட/ அலகு அலுவலக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் 24.12.2021ம் தேதிக்குள் தங்களது அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் சொத்து விவரத்தினை அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. பணியாளர்களின் சொத்து விவரங்கள் சம்பந்தமான அறிக்கையினை 24.12.2021க்குள் தெரிவிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது விளக்கம் கோரப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.