ஒரு இருபது ரூபாய் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது.
கடையில் கணக்குத் தவறி அதிகமாகக் கொடுத்த போதே அதைத் திருப்பி இருக்க வேண்டும்.
‘சரி இருக்கட்டும்!’ என்று கொஞ்சம் சபலப்பட்டு இரண்டடி எடுத்து வைத்தது தவறாகப் போய்விட்டது.
“ஏமாந்து கொடுத்தான் என்பதற்காக ஏமாற்றுவது சரியா..?” உடனே உள் மனதிலிருந்து ஒரு குரல் ஓடோடி வெளி வந்துவிட்டது.
இன்னொன்று…
“நீயா ஏமாந்தாய் , எடுத்தாய், திருடினாய் ???! அவன் எத்தனைப் பேர்களிடம் கொள்ளையோ..? கொள்முதலுக்கு மேல் அதிகம் வைத்து வரி, வசூலோ….? இதில் அவன் உன்னிடம் கொஞ்சம் ஏமாறல். இன்னும் சொல்லப்போனால் லாப வெள்ளத்தில் சிறு துளி. இந்த இழப்பு அவனுக்குப் பெரிதில்லை. லாபத்தில் நட்டமில்லை போ… போ…” துரத்துகிறது.
“அவனுக்கு லாபத்தில் குறையோ, நட்டத்தில் குறையோ…? உன்னிடம் வந்தது உன் பணமில்லை.அவன் பணம்..! அதில் ஏன் உனக்கு ஆசை..?” இது ஆழ் மனதின் குரல்!
“பணத்தை வழியில் உள்ள கோவில் உண்டியலில் போட்டு பாவ புண்ணியத்தைக் கடவுள் மேல் ஏற்றிவிட்டுத் தப்பித்துக் கொள்!” இது நடுத்தர மனதின் தீர்ப்பு.
“செய்கையே தவறு. தவறு மேல் தவறாய் ஆண்டவனே ஆனாலும் அடுத்தவன் மேல் எதற்குப் பழி..?!” இது நடுத்தர மனதிலிருந்து கொஞ்சம் விலகி இருக்கும் நல்ல மனதின் குரல்.
ஒரு மனம்!! ஒன்பதாயிரம் அலைக்கழிப்புகள்!!!
ஒரு மனிதன் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்..?
‘வம்பே வேண்டாம். திருப்பிக் கொடுத்து விடலாம்!’ திரும்பினேன்.
அப்பாடி! அத்தனை மனங்களும் அடுத்த வினாடி கப்சிப்!
நிம்மதி!!
நிறைவு..
– காரை ஆடலரசன்
நன்றி : சிறுகதைகள்.காம்