சர்வதேச பயங்கரவாதி பின்லேடனை யார் கொன்றது என்பது குறித்து அமெரிக்க ‘சீல்’ குழுவில் முரண்பாடான தகவல்கள் சமீபகாலமாக வெளிவருகின்றன. இதனால் உண்மையிலேயே பின் லேடனை யார் கொன்றார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு அல் காய்தா தீவிரவாதி பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்காவின் சிறப்புப் படையான ‘சீல்’ குழுவால் கொல்லப்பட்டான். அன்றிலிருந்து இன்று வரை பின் லேடனைச் சுட்டது யார் என்ற கேள்விக்குப் பல்வேறு குழப்பமான பதில்கள்தான் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில், சமீபத்தில் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் ‘சீல்’ குழுவின் முன்னாள் உறுப்பினரும், பின்லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவருமான ராப் ஓ நீல் என்பவர் பேட்டி அளித்துள்ளார்.
அதில், பின்லேடனை தான் சுட்டுக் கொன்றதாகக் கூறியுள்ளார். ஆனால் அதே குழுவில் இருந்த இன்னொருவர் தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு ராப் ஓ நீல் சுடுவதற்கு முன்பே பின் லேடன் அறையில் வேறு இரண்டு ‘சீல்’ நபர்கள் நுழைந்து அந்தத் தீவிரவாதியைச் சுட்டார்கள் என்று கூறியுள்ளார். இதே கருத்தை பின் லேடன் தேடுதல் வேட்டை குறித்து ‘நோ ஈஸி டே’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய இன்னொரு ‘சீல்’ நபர் மேட் பிஸோனெட் என்பவரும் முன் வைக்கிறார்.