ஜன. 31 வரை இரவு நேர ஊரடங்கு நீடிப்பு
* ஞாயிற்றுக்கிழமை மீண்டும் முழு ஊரடங்கு
* ஜன. 14 முதல் 5 நாட்களுக்கு வழிபாட்டு தலங்கள் மூடல்
* பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்ல பஸ்களில் 75% இருக்கைக்கு அனுமதி
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வருகிற 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு, பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்றும் இதர நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உலக சுகாதார நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சவுமியா சாமிநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா – ஒமிக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும்.
அதன்படி 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு, பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.
பொது அறிவுரைகள்: இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
* கடைகளின் நுழைவாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
* கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
* அனைத்து கடைகளும் குளிர் சாதன வசதியை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைபிடிக்கவும்.
நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்: நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
* கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை, வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், பின்வரும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்:
* நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
* நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரமாக நோய்த் தொற்றுப் பரவலை வீடு வீடாகக் கண்காணிக்க குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும்.
* கொரோனா நோய் தொற்றுக் கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும். தற்போது கொரோனா நோய் வேகமாக பரவி வருவதால், பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் கொரோனா நோய்த் தடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள், கடைகளை மூட பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், உரிய சிகிச்சை அளித்திட தேவையான மருத்துவக் கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இருப்பினும், பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளலாம். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.