பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக மத்திய அரசு நீதிபதிகள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரையிலான முக்கிய நபர்களின் தகவல்களை திருடியதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பின. அப்போது மத்திய அரசு சார்பில் உளவு பார்க்கவில்லை என பதில் அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
அங்கேயும் மத்திய அரசு அதே கருத்தை தெரிவித்தது. இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த நிலையில்தான் 2 பில்லியன் டாலர் அளவிலான இந்தியா- இஸ்ரேல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகாசஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது.
இது இந்தியாவில் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
பாராளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்தில் பொய் கூறிய மத்திய அரசு தேசத்துரோகம் செய்துவிட்டதாக ராகுல் காந்தி கடுமையாக சாடினர். மற்ற எதிர்க்கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருகிறது.
இந்தநிலையில 2024 தேர்தலுக்காக மத்திய அரசு மேலும் ஸ்பைவேரை வாங்கலாம். அதற்காக நாம் 4 பில்லியன் டாலர் வரை கொடுக்க முடியும் என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம் ‘‘இந்தியா- இஸ்ரேல் இடையிலான உறவில் புதிய இலக்கை எட்ட இது சிறந்த நேரம் என பிரதமர் மோடி இரண்டு நாட்டின் 30 வருட நட்பு குறித்து தெரிவித்துள்ளார். உண்மையிலேயே, அவர்கள் பெகாசஸ் ஸ்பைவேரின் நியூ வெர்சன் வைத்துள்ளீர்களா? என இஸ்ரேலிடம் கேட்க இது சிறந்த நேரம்தான்.
கடந்த முறை 2 பில்லியன் டாலர் அளவில் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த தடவை அதைவிட சிறப்பாக செய்ய முடியும். 2024 தேர்தலுக்காக கூடுதம் ஸ்பைவேர் பெற முடியும் என்றால், அதற்கான நாம் 4 பில்லியன் டாலர் கூடு கொடுக்க முடியும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் டைம்ஸை நம்ப முடியுமா? அந்த ஊடக நிறுவனத்துக்கு, பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் செய்தி வெளியிடும் என மத்திய மந்திரி வி.கே.சி. சிங் தெரிவித்த கருத்துக்கு ‘‘வாட்டர்கேட் ஊழல், பென்டகான் பேப்பர்ஸ் விவகாரத்தில் நியூயார்க் டைம், வாசிங்டன் போஸ்ட் பத்திரிகைகள் முக்கிய பங்காற்றின என்பது அவருக்குத் தெரியுமா? என்பது சந்தேகமாக உள்ளது. அவர் வரலாற்றை படிக்க விரும்பவில்லை என்றால், குறைந்த பட்சம் படமாவது பார்க்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.