‘நானே ராஜா நானே மந்திரி’, ‘ராஜ மரியாதை’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஜீவிதா. இவர் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர் தனது கணவருடன் இணைந்து தெலுங்கு படங்களை தயாரித்து வந்தார்.
இந்தநிலையில் டாக்டர் ராஜசேகர் கதாநாயகனாக நடித்த ‘எவனட தே நாகேண்டி’ (எவனா இருந்தா எனக்கென்ன) என்ற படத்தை தயாரிப்பாளர் சேகர் ரெட்டி தயாரித்தார். இந்த படத்தின் வினியோக உரிமையை நடிகை ஜீவிதா பெற்றுக்கொண்டார்.
இதற்காக ரூ.23 லட்சத்து 75 ஆயிரத்துக்கு 7 காசோலைகளை (செக்) சேகர் ரெட்டிக்கு ஜீவிதா கொடுத்தார். ஆனால் இதில் ரூ.2 லட்சத்துக்கு வழங்கப்பட்ட ஒரு காசோலையை தவிர மற்றவை வங்கி கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டது. இதனால் தனக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்குமாறு ஜீவிதாவிடம், சேகர் ரெட்டி பலமுறை கேட்டு வந்தார். ஆனால் அவர் கொடுக்கவில்லை என தெரிகிறது.
எனவே சேகர் ரெட்டி, நடிகை ஜீவிதா மீது ஐதராபாத்தில் உள்ள எர்ரமஞ்சில் கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அப்போது நடிகை ஜீவிதாவும் நீதிமன்றத்தில் இருந்தார். இதைத்தொடர்ந்து நடிகை ஜீவிதா ரூ.25 லட்சத்தை உடனே கோர்ட்டில் டெபாசிட் செய்தார். எனவே அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கோர்ட்டில் இருந்து வெளியே வந்த நடிகை ஜீவிதா கூறுகையில், ‘தயாரிப்பாளர் சேகர் ரெட்டி என்னை மோசடி செய்து விட்டார். அவர்தான் எனக்கு பணம் தர வேண்டும். இந்த வழக்கில் நான் நிரபராதி என்பதை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட்டு வரை செல்லவும் நான் தயார்’ என்று தெரிவித்தார்.
இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக தயாரிப்பாளர் சேகர் ரெட்டி கூறியுள்ளார்.