விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்திருந்த தடை செல்லாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, அந்த கூட்டமைப்பு மேல் முறையீடு செய்துள்ளது.
இதுகுறித்து கொழும்பிலுள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்ததும், அந்த அமைப்பின் நிதியாதாரங்களை முடக்கியதும் நடைமுறை விதிகளின்படி செல்லாது என ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பு வழங்கியது.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் மேல் முறையீடு செய்துள்ளது.
நடைமுறை விதிகளின்படிதான் விடுதலைப் புலிகள் மீதான தடைகள் செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததே தவிர, விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் அல்ல என்று நீதிமன்றம் கூறவில்லை.
இந்த விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வரும்வரை, விடுதலைப் புலிகள் மீதான தடையை செல்லுபடியற்றதாக்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் இந்த விவகாரம் முக்கிய விவாதப் பொருளாகியுள்ள நிலையில், ஐரோப்பிய யூனியன் இவ்வாறு விளக்கமளித்துள்ளது.