அன்புக் குழந்தைகளே,
கிருஸ்துமஸ் விழா வருடந்தோறும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வருகிறது, இது ரட்சகர் ஏசுநாதரின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு திருவிழா, எங்கும் கோலாகலந்தான். மாதா கோவிலில் கெரோல்ஸ் என்ற அவரைப் பற்றிய பாடல்களும் பாடுவார்கள்.
அவர் பிறந்த கதையைப் பார்ப்போமா?
ரோம் என்ற நாட்டை ஜீஸர் அகஸ்டு என்பவன் ஆண்டு வந்தான். அவன் ஒரு தடவை ஒரு ஆணை இட்டான். அது என்னவென்றால் யூதர் என்ற பிரிவு ரோம் நகரத்திற்குள் வந்தால் வரி செலுத்த வேண்டும். இதனால் பல யூதர்கள் கஷ்டப்பட்டனர்.
ஜோஸஃப், மேரி இருவரும் இந்தக் கஷ்டத்தைத் தவிர்க்க அந்த நகரை விட்டு பெத்லகேம் வந்தனர், மேரி கர்ப்பமாக இருந்ததால் நடக்க முடியாமல் ஒரு கழுதையின் மேல் ஏறிக் கொண்டு பிரயாணம் செய்தாள். பெத்லகமில் மக்கள் நிரம்பி வழிந்தனர், மேரிக்கு தங்க இடம் கிடைக்காமல் இருவரும் தவித்தனர் அப்போது ஒரு கருணை உள்ளம் படைத்த விடுதிக் காப்பகன் மாட்டுத்தொழுவத்தில் தங்க அனுமதித்தான், மேரி அங்கு ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுத்தாள். அப்போது அங்கு ஒளி நிறைந்தது, நறுமணம் கமழ்ந்தது. ஆம்! ஏசு பகவான் பிறந்தார். அன்னை மேரி அவரை ஒரு பழைய துணியில் சுற்றி வைத்தாள்.
எங்கும் நறுமணம்! எங்கும் ஒளி!
ஒரு இடையர் கூட்டம் வந்துகொண்டிருந்தது. அப்போது பிரகாசமான ஒரு ஒளி அவர்களுக்குத் தெரிந்ததும் பயந்து போய் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டனர். அப்போது ஒரு தேவதை தோன்றிச் சொல்லியது, “பயப்பட வேண்டாம், கேளுங்கள் ஒரு மகிழ்ச்சியானச் செய்தி, உங்கள் யாவரையும் காக்க ஒரு அரசன் பிறந்துள்ளார், அவரைத் தேடிப் போங்கள் அவரே ஏசு, உங்கள் இறைவன், அவரைத் துதியுங்கள்”.
தேவதை மறைந்து விட்டது. இடையர்கள் இதைக் கேட்டு வேகமாக தெய்வீகக் குழந்தையைத் தேடிக் கண்டு பிடித்தார்கள். அந்தக் குழந்தையை மண்டி இட்டு வணங்கினார்கள்.
இதன் நடுவில் சில ஜோசியர்கள் பிரயாணம் செய்துக் கொண்டு ஹெராட் என்ற அரசன் ஆண்ட பகுதிக்கு வந்தனர், “நாங்கள் ஒரு பேரொளியைக் கண்டோம், எங்கே எங்கள் ஏசு? எங்கே எங்கள் ஏசு என்று கேட்டுக் கொண்டு வர ஆகாயத்தில் ஒரு பேரொளியைக் கண்டார்கள், ஹெராட் அரசன் தன் ஆட்சிக்குத் தடங்கல் வந்து விடுமோ என்று பயந்தும், பொறாமை கொண்டும் ஜோசியர்களை வரவழைத்து, “எங்கே பிறந்திருக்கிறார் ஏசு? இடம் பார்த்து வந்து சொல்லுங்கள்” என்றான்.
ஜோசியர்களும் ஜெரூஸலம் போக, அங்கு திரும்பவும் ஒரு ஒளி கிழக்கே போவதைப் பார்த்தார்கள். அதைத் தொடர்ந்து அந்தத் திசையில் போய் குழந்தை இருக்கும் இடம் கண்டு பிடித்தார்கள். பின் அந்தக் குழந்தையை அவர்களும் வணங்கி நிறையப் பரிசுகளும் கொடுத்தனர். பின்னர் அவர்கள் ஒருக் கனவு கண்டனர், கனவில் அந்தக் கடவுள் வந்து, “ஹெராட் அரசனிடம் செல்லாமல் வேறு வழியில் உங்கள் நாடு செல்லுங்கள்” என்றார். இதேப் போல் ஜோசஃபுக்கும் கனவு வந்தது. அதில் ஒரு தேவதை தோன்றி, “மகனே, உடனே குழந்தையையும் தாயையும் அழைத்துக் கொண்டு எகிப்துக்குச் செல். நான் சொல்லும் வரை அங்கேயே தங்கு, ஹெராடு இக்குழந்தையைக் கொல்லத் திட்டம் செய்திருக்கிறான்.” என்றது.
உடனே அதன்படி அவர்கள் எகிப்துக்குப் பயணமானார்கள், ஹெராட் விஷயம் அறிந்து கொண்டு ஒரு ஆணை பிறப்பித்தான், “பெத்தலகத்தில் இருக்கும் இரண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் எல்லாரையும் கொல்லவும்” என்று சட்டம் போட்டான். ஆனால் அவனே கொல்லப்பட்டான். பின் தேவதையின் உத்தரவு பெற்று, குழந்தை ஏசுவுடன் பெறோர்கள் மகிழ்ச்சியுடன் இஸ்ரேல் வந்தனர், குழந்தை காப்பாற்றப்பட்டது, எங்கும் கொண்டாட்டம் தான், அந்த ஏசுபிரானை நாமும் வணங்கி ஆசி பெறுவோம். அவரது பெருமையைப் பாடுவோம்.
ஏசு பிறந்தார் அன்பு ஏசு பிறந்தார்!
வாழ்வில் ஒளி தெரியுதம்மா,
அன்னை மேரி அன்பு மகன்
ஒளியுடன் தோன்றினாரம்மா,
தொழுவம் ஒன்றில் பிறந்த பாலனே,
அன்பைப் பரப்பிய அன்பு தயாளனே,
சிலுவையின் அடித்தும் மன்னித்த தேவனே,
உயிர் விட்ட பின்னும் உயிர் பெற்ற நேசனே,
அதிசயம் நடத்தி வாழ்வளிக்கும் அன்பனே,
ஊமை பேச, முடவன் நடக்க,
இயலாத ஒன்றையும் நடத்திடும் செல்வனே,
கடவுளின் தூதனே எங்களின் தேவனே,
உன் அருள் இறங்கட்டும், எங்கள் வாழ்வு சிறக்கட்டும்,
“தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்”