உலரும் வாயினை
அடிக்கடி தண்ணிவிட்டு நனைக்கிறேன்
இப்படியாகவேனும்
எரியும் வயிற்றினை
அணைக்க நினைக்கிறேன்
அதிலும் தோற்றுப்போகிறேன்
நாளையும்,
அதற்கடுத்தநாளையும்,
இன்னும் அதிகமாய் பசிக்கலாம்
இல்லை பசியை உணரும் சக்தி
இல்லாமல்கூட போகலாம்..!
ஒரு ரொட்டித்துண்டையோ, அல்லது
காய்ந்த பாண்துண்டையோ நினைத்து
என் வயிறு காத்திருக்கக்கூடும்
என்ன சாப்பிட்டாய், என்று
யாராவது கேட்கமாட்டார்களா?
என் மனம் வானத்தை
அண்ணாந்து பார்த்து மூச்சுவிடுகிறது
இப்படியாக
நான் எதிர்பார்த்து எதிர்பார்த்து
என் பசி தீருமென
இப்பவரை காத்திருக்கிறேன்
அதற்கான நம்பிக்கை
நீண்டு நீண்டு கனந்து எரிகிறது
எவனோ ஒருவன் வருவான் என்று
எதிர்பார்க்கும் அங்கலாய்ப்பு
இன்னும் எனக்குள்
இருந்துகொண்டேதான் இருக்கிறது ..!
-சமரபாகு சீனா உதயகுமார்
03042022