கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக இன்று ஞாயிற்றுக்கிழமை 2 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் , நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு துரித தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து நாடளாவிய ரீதியில் கடந்த இரு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.
ஆரம்பத்தில் பொது மக்கள் மாத்திரம் இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் , தற்போது , மதத் தலைவர்கள் , சட்டத்தரணிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய நேற்று சனிக்கிழமை (9) காலை 8.30 மணிமுதல் கொழும்பு – காலி முகத்திடலில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிய நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் இரவோடு இரவாக இடம்பெற்று வருகின்றது.
‘பக்க சார்பற்ற மக்கள் போராட்டம்’ என்ற கருப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமைப்புக்கள் அல்லது சங்கங்கள் என எவையும் இன்றி இளைஞர் , யுவதிகளால் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் நேற்று சனிக்கிழமை கலந்து கொண்டனர்.