ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (9) கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
தமிழ், சிங்களப் புத்தாண்டு நாளான நேற்று முன்தினம் (14) ‘கோட்டா கோ கம’ எனப்பெயரிடப்பட்டுள்ள பகுதியில் தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து இனமக்களும் இணைந்து புதுவருடத்தைக் கொண்டாடியதுடன், தமது வீடுகளிலிருந்து தயார் செய்து எடுத்துவந்திருந்த உணவுப்பொருட்களையும் பகிர்ந்து உண்டனர்.
அதுமாத்திரமன்றி மருத்துவ நிலையம், நூலகம், ஓவியங்கள் வரைவதற்கான நிலையம், சட்ட உதவி வழங்கல் நிலையம், கையடக்கத்தொலைபேசி இலத்திரனியல் உபகரணங்களுக்கான மின்னேற்ற நிலையம் ஆகியவற்றுக்கென பிரத்தியேக கூடாரங்கள் நிறுவப்பட்டிருப்பதுடன் துரித இணைய வலையமைப்பு வசதியைப் பெறுவதற்கு ஏற்றவாறு இணையக்கோபுரமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தற்காலத்திற்கு ஏற்றவாறான புத்தாக்க சிந்தனைகள் மற்றும் புதுவிதமான போராட்ட உத்திகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டுவரும் இந்தப் போராட்டத்திற்கு உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.
கோட்டா கோ கமவில் புத்தாண்டுக்கொண்டாட்டம்
அரசாங்கத்திற்கு எதிராகக் கடந்த சனிக்கிழமை முதல் காலிமுகத்திடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போராட்டக்காரர்கள் தமிழ், சிங்களப்புத்தாண்டையும் அங்கேயே கொண்டாடவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
அதன்படி புத்தாண்டு தினமான கடந்த வியாழக்கிழமை காலை காலிமுகத்திடலில் காலை 8.41 மணிக்கு போராட்டக்காரர்கள் இணைந்து பால்பொங்கி புதுவருடக்கொண்டாட்டத்தை ஆரம்பித்துவைத்தனர்.
அதனைத்தொடர்ந்து சிங்களவர்களின் பாரம்பரிய முறைகளில் ஒன்றான ரபான் (மேளம்) அடித்தல் நிகழ்வும் நடைபெற்றது.
அதன்போது வழமையாகப் பாடப்படும் சிங்களப்பாடல்களுக்குப் பதிலாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் விமர்சித்தும் கேலிசெய்தும் பாடல்கள் இசைக்கப்பட்டன.
அதுமாத்திரமன்றி சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து இனமக்களும் தமது வீடுகளிலிருந்து பால்சோறு, கொக்கீஸ், கொண்டை பணியாரம், பிஸ்கட், ரோல்ஸ் போன்ற பலகாரங்களைத் தயார்செய்து எடுத்துவந்திருந்ததுடன், அவற்றைப் போராட்டத்திற்கு வருகைதந்திருந்த அனைவருக்கும் பகிர்ந்து வழங்கினர்.
அதேவேளை மாலை 4 மணியாகும் போது நாட்டின் பலபாகங்களிலிருந்தும் வருகைதந்த மக்கள் கோட்டா கோ கமவை வந்தடைந்தனர்.
அதன்படி இரவாகும்போது இலட்சக்கணக்கில் அங்கு திரண்டிருந்த மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், அவர் தலைமையிலான ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தியும் கடந்த காலங்களில் கொள்ளையடித்த நிதியையும் சொத்துக்களையும் மீளவழங்குமாறும் கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஆச்சரியத்திற்குரிய வகையில் வெளிப்படும் புத்தாக்கங்கள்
காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தப்படும் இடத்தில் கூடாரங்கள் அமைத்து அங்கேயே தங்கியதுடன், அவ்விடத்திற்கு ‘கோட்டா கோ கம’ எனப்பெயரிட்டதிலிருந்து நாளுக்குநாள் பல்வேறு புத்தாக்க சிந்தனைகளுடன் இப்போராட்டம் விரிவடைந்து வருகின்றது.
அந்தவகையில் மருத்துவ நிலையம், நூலகம் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது ஓவியங்கள் வரைவதற்கான நிலையம், சட்ட உதவி வழங்கல் நிலையம், கையடக்கத்தொலைபேசி இலத்திரனியல் உபகரணங்களுக்கான மின்னேற்ற நிலையம் ஆகியவற்றுக்கென பிரத்தியேக கூடாரங்கள் நிறுவப்பட்டிருப்பதுடன் துரித இணைய வலையமைப்பு வசதியைப் பெறுவதற்கு ஏற்றவாறு இணையக்கோபுரமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் உண்ணாவிரதம்
அதேவேளை உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல் சம்பவத்திற்கு நீதியையும், பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வையும்கோரி காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் போராட்டத்திற்கு மத்தியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக பிரசாத் நேற்றைய தினம் ஒருநாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
இதேவேளை காலிமுகத்திடல் போராட்டத்தில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்களான அர்ஜுன ரணதுங்க, சனத் ஜயசூரிய ஆகியோரும் இணைந்துகொண்டனர்.
வெளிநாடுகளிலும் தொடரும் போராட்டம்
காலிமுகத்திடல் உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் இலங்கை மக்களுக்கு ஆதரவாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஒட்டுமொத்த அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு வலியுறுத்தியும் கடந்த சில தினங்களாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
அந்தவகையில் லண்டனில் வசிக்கும் இலங்கையர்கள் அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஏறிய இருவர், அங்கு ‘கோ ஹோம் ராஜபக்ஷா’ (ராஜபக்ஷாக்களே, வீட்டுக்குச் செல்லுங்கள்) என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவண்ணம் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.
மேலும் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ‘கோட்டா என கம’ (கோட்டா வரும் இடம்) என்று எழுதப்பட்ட பெயர்ப்பலகையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.