காலி முகத்திடலை அண்மித்து அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாக , கிரிபத்கொட – மாகொல சந்தியில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, களனி பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர் துமிந்த நிரந்த பெரேராவை இம்மாதம் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர், கிரிபத்கொடை பொலிசாரால் மஹர நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை ( 14) ஆஜர் செய்யப்பட்ட நிலையில், மஹர பதில் நீதிவான் ரமனி சிறிவர்தன இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
காலி முகத்திடலை அண்மித்து அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாக, எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க மாகொல சந்தியில் தற்காலிக கொட்டில் அமைத்துக்கொண்டிருந்த களனி பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்க உறுப்பினர்கள் மீது கடந்த 13 ஆம் திகதி தாக்குதல் நடாத்தப்பட்டது.
அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் அவ்விடத்துக்கு சென்ற குழுவொன்றிலிருந்த நபர் ஒருவர் இந்த தாக்குதலை நடாத்தினார். .
இதனால் பல பல்கலைக் கழக மாணவர்கள் காயமடைந்து கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள கிரிபத்கொடை பொலிஸார், களனி பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர் துமிந்த நிரந்த பெரேராவைக் கைது செய்துள்ளனர்.
அவர் தலைமையில் வந்த குழுவே தாக்குதல் நடாத்தியமை தெரியவந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை வியாழக்கிழமை ( 14) பிற்பகல் 1.00 மணியளவில் மஹர நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக பெருமளவான சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.
இந் நிலையிலேயே தாக்குதல் நடாத்திய சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.