1
தமிழ் தேசிய அரங்கில் இருந்து எம்மை எவராலும் அகற்ற முடியாது என தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ். சிவகரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின்போது வெளியிட்டப்பட்ட கருத்துக்களின் காரணமாக அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக வெளிவந்துள்ள செய்திதொடர்பில் அவரிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எம்மை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை. எமக்கு இதுவரை எதுவித அறிவித்தலும் வரவில்லை. அவ்வாறு எம்மை எதேச்சையாக நீக்கிவிடமுடியாது. நாம் விரும்பினால் வெளியேறலாம்.
தீவிரமான கடும் போக்குடைய உண்மையான, நேர்மையாக தமிழின விடுதலை எனும் கோட்பாட்டுடன் விசுவாசமாக எந்த வித எதிர்பாப்பும் இன்றி தேசியத்திற்காக சேவையில் ஈடுபடும் நாம். அரசியல் வியாபாரிகள் இல்லை.
தமிழின விடுதலைக்காக, உயிர்தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றோம். அத்துடன் பதவிகளுக்கு ஆசைப்படுபவர்கள் என்றால் வாய் மூடி மௌனிகளாகவே இருந்திருப்போம். அது எமது நோக்கமில்லை. புலிகளின் மௌனிப்பிற்கு பின் இடைவெளி ஏற்பட்டதால் தான் இந்த அரங்கிற்கு வந்தோம். ஏன் என்றால் ஏலவே எல்லாவற்றையும் நேர்மையுடன் கவனித்துக் கொண்டவர்கள் அவர்கள்.
உண்மையாக தமிழின விடுதலை எனும் இலட்சியக் கோட்பாட்டுடன் கடந்த பல வருடங்களாக கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உரத்துப் பேசி வருகிறேன் என்பதை எவராலும் மறுக்கமுடியாது.
எனவே தமிழின விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், இருட்;டு வீட்டு தமிழ்த் தேசியவாதிகள் எல்லாம் தூய இனப்பற்றாளர்கள் போல் இருக்கையில் உண்மையை உரத்துப் பேசும் எம்மை குற்றவாளியாக்கப் பார்க்கின்றனர்.
எம்மை தமிழ்த் தேசிய அரங்கில் இருந்து அகற்றுவதற்கு சிலர் நயவஞ்சகத்தனமாக சூழ்ச்சி செய்கின்றார்கள் அதைக் கண்டு நாம் அஞ்சப்போவதில்லை
எனவே தாயகம் தேசியம் தன்னாட்சி சுயநிர்ணய உரிமை எனும் கோட்பாட்டில் இருந்து சற்றும் விலகிவிடாமல் கருத்துரைப்பதால் எம்மீது வரும் பலவிதமான காழ்புணர்ச்சி விமர்சனத்தைக் கண்டு நாம் அஞ்சப் போவதில்லை. இனவிடுதலைக்காக தமது உயிரைத் தியாகம் செய்த வீர மறவர்களின் இலட்சிய வேட்கைச் சிந்தனையில் எமது தேசியப் பணி வலுவிழக்காது தொடரும் என தெரிவித்தார்.