‘கடவுள் ஒரு ஓய்வு காலத்தில் அதிக நேரம் எடுத்து அற்புதமாக படைத்த அழகு தேவதை ஐஸ்வர்யா ராய். நம்மை எல்லாம் அவசர அவசரமாக ஒரே நாளில் படைத்துவிட்டார்’ என்று பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா புகழாரம் சூட்ட காரணம் இருக்கத்தான் செய்கிறது. 1994–ம் ஆண்டிலிருந்து 20 வருடங்களாக இந்தியாவில் உள்ள டீன்ஏஜ் பெண்களிடம் ‘நீ யாராக விரும்புகிறாய்?’ என்று கேட்டபோது கிடைத்த பதில் ‘ஐஸ்வர்யா ராய் போல் ஆகவேண்டும்’ என்பது! நிலைமை அவ்வாறு இருக்க பிரியங்கா சோப்ரா சொன்னது ஒன்றும் புதுமை இல்லையே!
உலக அழகி பட்டத்தை எத்தனையோ பேர் வென்றிருக்கிறார்கள். அப்படி வென்றவர்களில் அநேக பேர் காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால் அழகி பட்டத்தை வென்று உண்மையான அழகியாகவும், ஒரு மகிழ்ச்சியான அம்மாவாகவும் பெயரோடும், புகழோடும் இன்றும் திகழ்வது ஐஸ்வர்யா ராய் தான்.
மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்து, சினிமாவில் ஜொலித்து புகழின் உச்சியில் இருந்தபோது 2007–ம் ஆண்டு அமிதாப்பச்சனின் மருமகளாகவும், அபிஷேக்பச்சனின் மனைவியாகவும் மாறினார். 2011–ம் ஆண்டு ஆராத்யா பிறந்தாள். அதன்பிறகு இந்த உலக அழகியின் வாழ்க்கை மகள் என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருங்குவதுபோல் இருந்தது. நல்ல மனைவி, சிறந்த அம்மா என்ற இரு பொறுப்புகளோடு மகிழ்ந்துகொண்டிருந்தார்.
‘‘ஐஸ்வர்யா ராய் எப்போதும் ஆராத்யாவுடன் பேசிக்கொண்டே இருப்பார். ஒவ்வொரு எழுத்துகளையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பார். அடிக்கடி அவர்களின் உரையாடல்களை நான் ஒட்டுக் கேட்டதுண்டு. அவர்கள் அவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள். ஆனால் ஆராத்யாவிற்கு மட்டுமில்லாமல் எனக்கும் ஐஸ்வர்யாராயின் அன்பு கிடைத்துக்கொண்டுதான் இருந்தது. எவ்வளவு முக்கியமான வேலையாக வெளியே சென்று வந்தாலும் இரவு உணவிற்கு என்ன வேண்டும் என்று கேட்பார்’’ என்கிறார் அபிஷேக் பச்சன்.
2010–ம் ஆண்டு ‘குஷாரிஷ்’ தான் ஐஸ்வர்யாராயின் கடைசி படமாக இருந்தது. 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கேமரா முன்னால் வந்திருக்கிறார்.
‘மனைவி, அம்மா ஆகிய இரு பொறுப்புகளிலும் முழுமையாக இறங்கியபோது, கேமரா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கிவிட்டதுபோல் உணர்ந்தீர்களா?’ என்று ஐஸ்வர்யாராயிடம் கேட்டால்..
‘‘உண்மையில் நான் கேமரா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கவே இல்லை. விளம்பர படங்களிலும், சர்வதேச திரைப்பட விழாக்களிலும் ஜொலித்தவாறே இருந்தேன். உலக பத்திரிகைகளின் அட்டை படங்களிலும் நான் இடம்பெற்றிருந்தேன்.
திருமணத்திற்கு பின்னர் நடிப்பீர்களா? என்ற கேள்வியை நடிகைகளிடம்தான் அதிகமாக கேட்கிறார்கள். இந்த கேள்வியை திருமணம் செய்துக் கொண்ட நடிகர்களிடம் கேட்பதே இல்லை. திருமணம் என்பது நடிகைகளின் இறுதி கட்டம் என்று நினைத்துவிடுகிறார்கள். ஆனால் நான் ஒருபோதும் அப்படி நினைத்ததில்லை. நாம் ஒரு தொழில் செய்கிறோம். அதன் மீது முழு மரியாதை வைத்து முழு மனதோடு ஈடுபடும்போது மற்றவர்கள் கூறுவதை பற்றி கவலைப்படவேண்டியதே இல்லை’’
அம்மாவான பின்பு நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?
‘‘ஜோதா அக்பர் திரைப்படத்தில் திருமணத்திற்கு முன்னரும், பின்னரும் நடித்தேன். டைரக்டர் என்னிடம் படத்தில் உங்களின் பெயரை ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா பச்சன் என்று இருவிதமாக குறிப்பிடட்டுமா? என்று கேட்டார். நான் சிரித்தேன்.
நான் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘ஐஸ்பா’ திரைப்படத்தின் கதை அருமையானது. நல்ல கதாபாத்திரம். இந்த காலகட்டத்தில் திருமணமானவர்களுக்கு நல்ல அழுத்தமான கதாபாத்திரம் கிடைப்பது அரிதான விஷயம்’’ என்கிறார்.
ஐஸ்வர்யாராய் சிறுவயதில் கனவில்கூட தேவதையாகத்தான் வாழ்ந்திருக்கிறார்.
‘‘கனவு காண்பது எனக்கு சிறுவயதிலே பிடித்தமான விஷயம். கனவுகளில் எப்போதும் மகாராணியாக வலம் வருவேன். 11–வது வயதில் கண்ட கனவில் ஒரு அதிசய உலகத்தை உருவாக்கி அதில் தேவதையாக வாழ்ந்தேன்’’ என்கிறார்.
இவரது பூர்வீகம் கர்நாடகா. தந்தை கிருஷ்ண ராய், தாய் பிருந்தா. அண்ணன் ஆதித்யா ராய் கப்பல் தொழில்நுட்ப என்ஜினீயர்.
‘‘எனது பெற்றோர் சிறுவயதிலே அனைவரிடமும் சகஜமாக பேசி, இயல்பாக பழக கற்றுக்கொடுத்தார்கள். அண்ணனின் பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்தார்கள்.
இதனால் நான் நன்றாக பேசுவேன். பேச்சுத்திறனில் வாயாடி என்று சொல்லலாம். நான் சொல்ல நினைப்பதை மற்றவர்கள் தெளிவாக புரிந்துக் கொள்ளும்படி பேசுவேன். அண்ணனின் முன்னால் பேசுவதை கேட்டு அண்ணனை, என்னுடைய தம்பியா? என்று பலர் கேட்டு வியந்துள்ளனர். இப்படி தைரியமாக பேசும் பழக்கம்தான் நான் உலக அழகியாக உறுதுணைபுரிந்தது’’
உங்கள் அழகின் ரகசியம்?
‘‘யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்கின்றேன். உணவுக்கட்டுப்பாட்டைவிட, எதை உண்ணவேண்டுமோ அதை அளவோடு உண்கிறேன். மசாலா மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை குறைத்துவிட்டு வேகவைத்த காய்கறிகள், பழங்கள், சாலட்கள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்கின்றேன். ஆரோக்கியமான உணவு பொருட்களை தேர்ந்தெடுத்து உண்ணும் போதுதான் உணவு கட்டுபாடு என்பது முழுமை அடைகிறது..’’ என்று ஆரோக்கியமாகவும் பேசுகிறார், இந்த அழகு தேவதை.