பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் (90) உடல் நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (ஜன.24) காலமானார்.
கடந்த சில வாரங்களாக கணையத்தில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.எஸ் ராகவன் சனிக்கிழமை காலமானார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வெம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வி.எஸ் ராகவன் 1925-ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதலே நாடகங்கள் மீது ஈர்ப்பு கொண்ட வி.எஸ்.ராகவன், காஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த நாடகக் குழுக்களில் இணைந்து நடித்து வந்தார்.
பின்னர், சென்னை வந்த வி.எஸ்.ராகவன் இயக்குநர் பாலசந்தர் எழுதிய பல நாடகங்களில் நடித்துள்ளார்.
“நகையே உனக்கு நமஸ்காரம்’ என்ற பெயரில் இவர் நடித்த நாடகம் அந்த நாள்களில் பிரபலமானது.
1954-ஆம் ஆண்டு வெளிவந்த “வைரமாலை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் வி.எஸ்.ராகவன்.
தொடர்ந்து பல சிறு வேடங்களில் நடித்து வந்த அவர் பின்னாளில் சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கினார்.
தொடர்ந்து “சங்கே முழங்கு’, “உரிமைக்குரல்’, “சவாலே சமாளி’, “வசந்த மாளிகை’ என பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என தலைமுறைகள் கடந்து 1,500-படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
“ஆல் இன் ஆல் அழகு ராஜா’, “கலகலப்பு’, “ஒரு கன்னியும் மூன்று களவானிகளும்’ என தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இது தவிர சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
மறைந்த வி.எஸ். ராகவனுக்கு கே.ஆர்.சீனிவாசன், கே.ஆர்.கிருஷ்ணன் என்ற இரு மகன்கள் உள்ளனர். மனைவி தங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.