தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு இருப்பது உண்மைதான் என்று அக்கட்சியின் பொருளாளரும், மனைவியுமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் கடந்த ஜூன் 14 ஆம் திகதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நீரிழிவு பிரச்சினை காரணமாக விஜயகாந்தின் கால்விரல் அகற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.
இது தே.மு.தி.மு.க தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
‘கப்டன் விஜயகாந்த்திற்கா இந்த நிலைமை’ என்று சமூக வலைதளங்களில் சோகத்தை வெளிப்படுத்தினர். அத்தோடு, மீண்டும் பழைய விஜயகாந்தாக வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக பதிவிடப்பட்டது.
இது தொடர்பாக தே.மு.தி.க தலைமை வெளியிட்ட அறிக்கையில், ‘நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் வலதுகாலில் உள்ள விரல் பகுதியில் இரத்த ஓட்டம் சீராக இல்லாததால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது.
மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் நலமுடன் இருக்கிறார். மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து விஜயகாந்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரேமலதாவிடம் விஜயகாந்த் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் சற்று தொய்வு இருப்பது உண்மை தான். 10 நாட்களுக்கு ஒருமுறையோ, மாதத்திற்கு ஒருமுறையோ மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் விஜயகாந்த்தை தொடர்ந்து பரிசோதனைக்கு அழைத்து செல்கிறோம். அப்படி மருத்துவப் பரிசோதனைக்கு செல்வதை பெரிதுபடுத்த வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.