தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. இவரது நடிப்பில் சென்ற வருடம் ‘மான் கராத்தே’, ‘அரண்மனை’, ‘மீகாமன்’ ஆகிய படங்கள் வெளியாகின. இந்த வருடம் பொங்கல் தினத்தன்று விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்த ‘ஆம்பள’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் ‘வாலு’, ‘உயிரே உயிரே’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘புலி’, ‘இதயம் முரளி’ உள்ளிட்ட படங்கள் ஹன்சிகா நடிப்பில் வெளிவர உள்ளன. பல படங்களில் பிசியாக நடித்தாலும் சமூக சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டு சிறுவர், சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தான் தத்தெடுத்த 25 குழந்தைகளுடன் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை மும்பையில் கொண்டாடியுள்ளார். அக்குழந்தைகளோடு இணைந்து மழலையோடு மழலையாய் விளையாடி குழந்தைகளுக்கு மண் பாண்டங்கள், பொம்மைகள் செய்து பரிசளித்து மகிழ்வித்தார்.
இவர்களுக்காக மும்பையில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் வீடு கட்டவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.