செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா நாகேஷ் பற்றி சுவையான குறிப்புகள்

நாகேஷ் பற்றி சுவையான குறிப்புகள்

3 minutes read

நாகேஷ்… மாறும் உடல் மொழி… ஏறி இறங்கும் குரல் ஜாலம்.. தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்!….

 •        பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வீட்டுச் வளர்ந்த தொட்டில்!

 •         பெற்றோர் கிருஷ்ணராவ்- ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் –குண்டப்பா!

 •         பள்ளி நாடகத்தில் நாகேஷீக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!

 •        இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர் ரேடியோ கடை ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!

 •         முதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

 •         கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்து அவரது நடிப்பில் வெளிச்சம்!

 •         ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்.... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!

 •         இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!

 •         முதல் படம் `தாமரைக்குளம்’ ஷீட்டிங்கின் போது சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் இவர். `மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா!

 •         `அபூர்வ ராகங்கள்’ படத்தில் இவருக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் கண்ணதாசன், அவரிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் நாகேஷ் கவிதை கேட்ட இவர், `அதான்யா கண்ணதாசன்’ என்று சொல்லிவிட்டு, `பீஸ் எவ்வளவு?’ என்பார். `இதுதான்யா ஃபீஸ்’ என்பார் கண்ணதாசன்!

 •         முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!

 •         எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!
 •        `திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்!

 •        நகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வர் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’ ல் வில்லன், மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!

 •         `அபூர்வ ராகங்கள்’ ஷீட்டிங், பாலசந்தர் ஆக்‌ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ். கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸீக்கு இது ஒரு சாம்பிள்!

 •         இவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!

 •         டைரக்‌ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்‌ஷனில் வெளிவந்த திரைப்படம்!’

 •         பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

 •         `சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!

 •        `நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமல்ஹாசன்!

 •         `பஞ்சதந்திரம்’ ஷீட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா?’

 •         `தசாவதாரம்’ கடைசி நாள் ஷீட்டிங்க்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured – டா கமல்!’

 •         தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!

 •         இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல்!

 •         30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை!  

தொகுத்து வழங்குபவர்
திருமதி ஆனந்திராம்குமார்

நன்றி : ஆனந்த விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More