நடிகர் கமலஹாசன் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–
கேள்வி:– உத்தம வில்லன் படத்தில் உத்தமன் யார்? வில்லன் யார்?
பதில்:– சூழ்நிலைகள் தான் உத்தமனையும், வில்லனையும் உருவாக்கிறது. சூழ்நிலைகளில் இருந்து தப்பி உத்தமனாக, எப்படி நிற்கிறான் என்பதுதான் கதை.
கே:– உங்கள் படங்கள் வெளியாவதில் காலதாமதங்கள் ஏற்படுகிறதே?
ப:– அப்படியெல்லாம் இல்லை. விஸ்வரூபம் படத்தை ஆறு மாதத்தில் முடித்தேன். சில பிரச்சினைகளால் அது தாமதம் ஆனது. விஸ்வரூபம்–2 படத்தை மூன்று மாதத்தில் முடித்தேன். தயாரிப்பு தரப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. உத்தமவில்லன், பாபநாசம் படங்களும் முடிந்துள்ளது.
கே:– ஒரே நேரத்தில் நிறைய படங்களில் நடிப்பது கஷ்டமாக இல்லையா?
ப:– விதவிதமான கேரக்டர்களில் ஒரே நேரத்தில் நடிப்பது எனக்கு புதிது அல்ல. மரோசரித்திரா, மன்மதலீலை படங்களில் ஒரே நேரத்தில் நடித்து இருக்கிறேன்.
கே:– உத்தமவில்லன் படத்தை ரமேஷ் அரவிந்தை வைத்து இயக்குவது ஏன்?
ப:– நடிப்பு, இயக்கம் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வது சிரமமானது. இந்த படத்தில் மேக்கப்புக்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டிய இருந்தது. ரமேஷ் அரவிந்தும் நானும் ஒரே மாதிரியான எண்ண ஒட்டத்தை உடையவர்கள்.
கே:– உங்கள் குரு பாலச்சந்தர் உத்தமவில்லன் படத்தில் நடித்து இருப்பது பற்றி?
ப:– பாலச்சந்தர் நடித்ததால் உத்தமவில்லன் படத்தை என்னுடைய சொத்தை போல் கருதுகிறேன். நடிகன் என்ற வாழ்க்கையே அவர் கொடுத்ததுதான். பாலசந்தர் இல்லாவிட்டால் நான் நடிகனாகி இருக்க மாட்டேன். உதவி இயக்குனராகவோ, டான்ஸ்மாஸ்டராவோ இருந்து இருப்பேன்.
கே:– உங்களை கவர்ந்த நடிகர்கள்?
ப:– நிறைய பேர் இருக்கிறார்கள். தெலுங்கு பட உலகில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் என பலர் இருக்கிறார்கள். ஊட்டியில் ஒரு படப்பிடிப்புக்காக சென்று ஓட்டலில் தங்கி இருந்தபோது அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தேன். பக்கத்து அறையில் சத்தம் கேட்டது. போய் பார்த்தேன். அங்கு என்.டி.ராமராவ் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். நான் தேவை இல்லாமல் அதிகாலையில் எழுந்திருக்க மாட்டேன்.
கே:– ஹாலிவுட் படங்கள் பற்றி?
ப:– ஹாலிவுட்காரர்கள் நம் கதைகளை திருடுகிறார்கள். தெலுங்கில் நான் நடித்த சுவாதி முத்யம் படத்தின் கதையைப் போல் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஹாலிவுட்டில் பாரஸ்ட் ஹம்ப் என்ற படம் வந்தது. அவர்கள் மீது நாம் வழக்குதான் போட வேண்டும். எஸ்.வி.ரங்கராவ் மாதிரி ஒரு நடிகர் அவருக்கு பிறகு வரவில்லை. எஸ்.வி.ரங்காராவ் ஒரு மகாநடிகர். அவர். மாதிரி நடிகர்கள் வராதது வேதனை அளிக்கிறது.
எஸ்.வி.ரங்காராவ் மாதிரி, நாகேஷ் மாதிரி ஆயிரம் பேர் உருவாக வேண்டும்.
இவ்வாறு கமலஹாசன் கூறினார்.