செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா நினைவுகள் | சிறுகதை | கோதண்டபானி நிரஞ்சலாதேவி

நினைவுகள் | சிறுகதை | கோதண்டபானி நிரஞ்சலாதேவி

6 minutes read

குமரன் பரபரப்பாக இருந்தான் நேரம் செல்ல செல்ல ஆபிஸ் வேலைகளை முடித்து எப்போது விமானநிலையத்திற்கு ஓடுவோம் என்று ஏக்கமாக இருந்தது அவனுக்கு,காரணம் அவனுடைய காதலி சிந்து ஆபிஸ் வேலையாக இரண்டு மாதங்களுக்குப் வெளியூர் சென்று இன்று ஊர் திரும்புகிறாள், இவனுக்கு போன் பன்னி விமானநிலையத்திற்கு வரும்படி அவள் சொன்னதிலிருந்து குமரனுக்கு இருப்புக்கொள்ளவில்லை இரவு முழுவதும் தூங்க முடியாமல் பிரண்டு பிரண்டு படுத்தான் வழமைக்கு மாறாக அதிகாலையில் எழுந்துவிட்டான்.

ஆபிஸ்க்கு மட்டம் போடமுடியாது,இவன் பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தது,அதுமட்டும் இல்லாமல் சிந்து மாலை ஏழு மணிக்கு தான் வெளியில் வருவாள் வீட்டில் இருப்பதால் எந்த உபயோகமும் இல்லை என்பதால் அரை மனத்தோடு வேலைக்கு வந்தவன்,மணியைப் பார்த்துப்பார்த்து முடிக்க வேண்டிய வேலைகளை செய்து கொண்டிருந்தான். என்னடா இன்னைக்கு மாப்பிள்ளை மாதிரி வந்திருக்க ஆப்பிஸ்க்கு என்று கிண்டல் செய்துக்கொண்டே வந்தான் இளங்கோ,அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே என்றான் குமரன்,பொய்சொல்லாத அது தான் உன் முகத்தில் தெரியுதே சிந்து வாராள் என்று அப்படிதானே என்றான் இளங்கோ, ஆமாடா என்று சிரித்தான் குமரன் எப்படா வாராள் எயார்ப்போட் போரியா? அப்படி போனால் என்னுடைய காரை எடத்துக்கிட்டுப்போ உன்னுடைய பைக் சாவியை வைத்துவிட்டுப் போ என்றான் இளங்கோ.

குமரன் இளங்கோ இருவரும் காலேஜ் நண்பர்கள் இளங்கோ வசதியான குடும்பம்.குமரன் ஆரம்பத்தில் அவனிடம் பழகுவதற்கு தயக்கம் காட்டினான்,போக போக இளங்கோவின் ஆடம்பரமில்லாத அவனுடைய போக்கு, குமரனை இலகுவில் அவனிடம் நெருங்கச் செய்தது,சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் குமரன் அவனுடைய அப்பா கதிர்வேல் நெசவுத் தொழிலாளி தனது முறைப்பொண்ணு திருவேனியை மணம் முடித்தப் பிறகு கைத்தொளிலாக வீட்டில் ஆடைகளை நெய்து வியாபாரம் செய்துவந்தார்கள் அந்த வருமானத்தில் தான் மகன் குமரனையும்,மகள் தேன்மொழியையும் படிக்க வைத்தார்கள்.

இளங்கோவின் அப்பா இராஜேந்திரன் நடத்தி வருகின்ற கம்பனியில் குமரனுக்குப் வேலை ஏற்பாடு செய்து தந்ததுவே இளங்கோ தான்,அவன் வீட்டில் வந்து தங்கும்படி குமரனை கட்டாயப்படுத்தினான் இளங்கோ,அதற்கு மட்டும் அவன் ஒத்துக்கொள்ளவில்லை வாடகைக்கு அறையெடுத்து தங்கினான் குமரன்.அந்த வீட்டு உரிமையாளரின் மகள் தான் சிந்து அவளும் வேலைக்குப் போய்கொண்டு இருந்தாள் ஆரம்பத்தில் இருவரும் பார்த்துக் சிரித்துக் கொள்வதோடு சரி,மொட்டை மாடிக்கு உடை காயவைக்க வரும் சிந்து குமரனை காணும்போது பேச ஆரம்பித்தாள் வீட்டு ஓனர் மகள் என்பதால் குமரனும் ஒரு சில வார்த்தைகளுடன் முடித்துக்கொள்வான்.இப்படி ஆரம்பித்த இவர்களின் சந்திப்பு காதலாக மாறியது,இதற்கு காரணமே இளங்கோ என்று தான் கூறவேண்டும்

குமரன் தன் காதலை முதன் முதலாக இளங்கோவிடம் தான் கூறினான்,எனக்கு பயமாக இருக்கு மச்சான் அவளிடம் கூற அவள் வசதியான குடும்பம் அப்பா வெளியூரில் இருக்கார் அதனால் தான் தயக்கமாக இருக்கு என்றான் குமரன்.

அதை யோசிக்காதே என்னிடமும் ஆரம்பத்தில் அப்படி தான் இருந்த முதல் அந்த தயக்கத்தை விடு காதலுக்கு அதுவெல்லாம் முக்கியம் இல்லை மச்சான் மனது ஒத்துப்போனால் போதும் உன் காதலை அவளிடம் முதல் கூறு பிறகு மற்றயதை யோசிக்களாம் என்று தைரியம் கொடுத்தான்.அதே வேகத்தில் குமரனும் சிந்துஜாவிடம் தன் காதலை வெளிப்படுத்த எந்த மறுப்பும் கூறாமல் அவளும் ஒத்துக்கொண்டாள்.

மாலை ஆறு மணி இளங்கோவின் காரை எடுத்துக் கொண்டு விமானநிலையத்திற்கு விரைந்தான் குமரன்.சற்று நேரத்தில் சிந்து வெளியில் வந்தாள்,அவளிடம் பல மாற்றங்கள் முடியை குட்டையாக வெட்டி சுருட்டி விட்டிருந்தாள்,மினி ஸ்கேட் டைட்டான ஸ்கினி,உதட்டில் அடர்ந்த கலரில் லிப்ஸ்டிக் ஆளே மாறிபோய் இருந்தாள்.இது நம்ம சிந்துவா?என்று மனதில் நினைத்துக்கொண்டிருந்தப்போதே அவன் அருகில் வந்து அவள் அவனை கட்டிப்பிடித்த விதம் அவனுக்கு ஆச்சிரியமாக இருந்தது ஒருவருடமாக இருவரும் காதலிக்கிறார்கள் இருவருக்கும் சிறு இடைவெளி இருந்தது அத்து மீறல்கள் என்று அவர்களின் காதலை கொச்சைப்படுத்திக் கொள்ளவில்லை இது நாள் மட்டும் அதிகமாக அவர்களின் காதல் மொட்டை மாடியில் இடம்பெறும்.

வெளியில் சுற்றவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை சிந்துவின் தாத்தா,பாட்டி படியேறி மேலே வருவது இல்லை அம்மா இந்திரா எப்போதாவது வருவாள். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் தாமரை ஆறு மணியோடு போய்விடுவாள்.யாராவது ஒரு ஆண் துனை வேண்டும் என்பதற்காகவே மேல் மாடியின் அறையை வாடகைக்கு விட்டிருந்தார்கள்,தற்போது குமரன் அதில் இருக்கிறான் இது எல்லாம் இவர்களுக்கு வசதியாகவே போய்விட்டது அப்படி இருந்தும் இடைவெளியிருந்தது இருவருக்கும்

குமரன் சிந்துவின் அப்பா குணசேகர் வெளியூரில் வரும்வரை காத்திருந்தான் அவர்களின் காதலை தெரியப்படுத்தி சம்மதம் வாங்குவதற்கு.இதற்கிடையில் சிந்து வேலை செய்த கம்பனி அவளை வெளியூர் அனுப்பியது அந்த கம்பனியின் கிளை நிறுவனத்தில் சில பயிற்சிகள் பெறுவதற்கு,போகும் போது அடர்ந்த நீண்ட கூந்தலுடன்,முகத்தில் எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் பொட்டு வைத்து,சுரிதார் போட்டுப் போனப் பெண் இரண்டு மாதத்தில் இவ்வளவு மாற்றங்களுடன் வருவாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை ஆளே மாறிட்ட என்றான் குமரன் உங்களுக்குப் பிடித்திருக்கா?என்றாள் சிந்து தலையை மட்டும் ஆட்டினான்.

வெளிநாட்டு மோகம் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டே காரில் ஏறினான் குமரன்.சிந்து காரில் ஏறியதிலிருந்து வெளியூர் புகழ் பாட ஆரம்பித்தாள்,அங்கு எல்லாம் ஏறினா இறங்கினா கார் தான் என்றாள்.இரண்டு மாதங்களாக போனில் கதைப்பதுவும் குறைவாகவே இருந்தது காரணம் நேரம் வித்தியாசம் அந்த கவலை எதுவும் சிந்துவிடம் இல்லையென்று யோசிக்கத் தோன்றியது குமரனுக்கு.

சிந்துவை தான் அழைத்துக்கொண்டு வருவதாக குமரன் சிந்து அம்மா இந்திராவிடம் காலையில் கூறியிருந்தான் அவளும் குமரன் மீது உள்ள நம்பிக்கையில் சரி என்று கூறினாள் அவளுக்கு தெரியாதே இவர்களின் காதல் போகும் போதும் விமானநிலையத்தில் விட்டதும் குமரன் தான்.இருவரும் வீட்டை அடைந்தார்கள் சிந்துவின் தாத்தா பாட்டி அவளின் கோலத்தைப் பார்த்து சிடுசிடுத்தார்கள்.

அம்மா வாய்விட்டே கேட்டுவிட்டாள் என்னடி இது கோலம் அறையும் குறையுமாக வந்து நிற்கிற பார்க்க சகிக்கல இதுக்கா போன,உன்னை அனுப்பியது தப்பா போச்சி உன்அப்பாவை சொல்லனும் நான் வேண்டாம் என்று சொன்னேன் அவர்தான் இல்லை அவள் போகட்டும் என்றார் நீ சும்மா இரு அம்மா நாங்கள் தான் இன்னும் பட்டிகாடு மாதிரி இருக்கோம் எனக்கு அது பிடித்திருக்கு நான் மாறிக்கிட்டேன் என்றாள் சிந்து.

அந்த ஊருக்கு சரிடி இங்கு இப்படி திரிந்தால் உன்னை யாரும்கணக்கெடுக்க மாட்டார்கள் என்றாள் அம்மா பரவாயில்லை நான் அங்கு போய் இருந்துக்கிறேன் என்றதும் சுருக்கென்றது குமரனுக்கு,பாருங்க தம்பி எப்படி வாய்போடுறா..என்று குமரனிடம் குறைப் பட்டாள் இந்திரா,சரி ஆன்டி விடுங்கள்,இப்ப தானே வந்தாள் நீ ரெஸ்ட் எடு சிந்து, என்று கூறிவிட்டு, நான் மாடிக்குப் போறேன் ஆன்டி என்று கூறிவிட்டு குமரன் அறைக்குச் சென்றுவிட்டான்.

அதன் பிறகு பல மாற்றங்கள் சிந்துவிடம் எப்போதும் போனும் கையுமாக இருந்தாள்.குமரனிடம் ஒரு நாள் நானும் நீங்களும் திருமணம் முடித்து வெளியூர் போய்விடுவோமா? என்றாள் எனக்கு வேலைக்குப் பிரச்சினை இல்லை,நான் வேலை செய்த கம்பனியின் மெனேஜர் தீபன்,என்னை அங்கு வேலை செய்யும்படி வற்புருத்தினார் உங்களுக்கும் இலகுவில் வேலை தேடிக்கொள்ளலாம் நாங்கள் அங்குப் போய் செட்டில் ஆகிவிடுவோம் என்றாள்.அது சரிவறாது சிந்து என் பெற்றோர்களை இங்கு தனியாக விட முடியாது,நான் ஒரே மகன் அவர்கள் வேர்வை சிந்தி என்னைப் படிக்கவைத்தார்கள் அவர்களை அந்தரத்தில் விட்டுவிட்டு என்னால் வரமுடியாது என்றான் குமரன்.

ஏன் தேன்மொழி இருக்காள் தானே அவள் பார்த்துக் கொள்வாள் என்று சிந்து கூறியதும் அவனுக்கு கோபம் வந்து விட்டது, நீ என்ன கதைக்கிறாய் அவள் இன்னொரு வீட்டுக்கு கட்டிப் போய்விடுவாள் அவளை நம்பி அப்பா,அம்மாவை விடமுடியாது இந்த நினைப்பை இத்தோடு விடு என்றான்.அவள் முகம் சுருங்குவதை அவன் கவனிக்க தவறவில்லை.

சிந்து குமரனிடம் இருந்து மெதுவாக விலகத்தொடங்கினாள். மொட்டை மாடிக்கு வருவதை குறைத்துக்கொண்டாள்,இவன் போன் பன்னும் போது எல்லாம் அவள் போனில் யாருடனாவது பேசிக்கொண்டிருப்பாள் அப்டியே எடுத்தாலும் வேலையென்று போனை வைத்துவிடுவாள்.

குமரனுக்கு இது தப்பாக பட்டது இளங்கோவிடம் கூறலாம் என்று யோசித்தான் அன்று இளங்கோவை பார்க்கும் போது அவனே முந்திக்கொண்டான் என்ன மச்சான் கொஞ்ச நாட்களாகவே ஆளே நல்லா இல்லை ஏன் எதுவும் பிரச்சினையா? அன்றே கேட்க்கனும் என்று நினைத்தேன் வேலையில் மறந்து போகுதடா சிந்து எப்படி இருக்கா என்றான் அதை ஏன் மச்சான் கேட்கிற அவள் போக்கே புரியமாட்டேங்குது என்றான் பொண்ணுங்களே அப்படிதான் மச்சான் புரியாத புதிர்கள் என்று சிரித்தான் உனக்கு சிரிப்பாக இருக்கு என்றான் குமரன் அதற்கு இல்லை மச்சான் கூடுதலாக அவர்களை அலசி ஆராயப்போகாதே அவர்கள் போக்கில் அவர்களை விடனும்,அதற்காக சொன்னேன் கோபபடாதே என்றான் இளங்கோ.

அவள் என்னிடமிருந்து ஒதுங்குகிறாள் என்றான் குமரன் என்னடா சொல்ற..இளங்கோ பதட்டம் ஆனான்.ஆமாடா முன்பு மாதிரி அவள் இல்லை வெளியூர் மோகம் சரியாகிவிடும் என்று நினைத்தேன் அது தப்பாக போய்விடும் போலிருக்கு சிந்துவின் நடவடிக்கைகளை இளங்கோவிடம் கூறினான் குமரன்.

யோசிக்க வேண்டிய விடயம் தான்,உன் அப்பா,அம்மாவை எப்படி தனியாக விடமுடியும் என்றான் இளங்கோ,உனக்கு புரியுது அவளுக்குப் புரிய மாட்டேங்குது என்ன செய்வது என்று குமரன் பெருமூச்சி விட்டான்.நான் அவளிடம் பேசி பார்க்கவா என்றான் இளங்கோ,வேண்டாம் மச்சான் காதல் இன்னொருவர் பேசி புரியவைக்கிற சமாச்சாரம் இல்லை,தானாகப்பூத்து குலுங்குவது காதல் அதை பூக்க வைக்க முயற்சி செய்யக்கூடாது என்று விரக்தியாக சிரித்தான் குமரன்.

சிந்துவின் அம்மா இந்திரா குமரனை வாடகைக்கு வேறு அறை பார்க்கச் சொன்னாள் அவளுடைய கணவர் குணசேகர் வருவதாகவும் அவர் வந்தாள் அவனின் அறை தேவைப்படுவதாகவும் சொன்னாள் அவனும் ஒரு மாதத்தில் போய்விடுவதாக சொன்னான்.இது சிந்துவின் வேலை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும் அன்று மாலை சிந்துவைக் கண்ட குமரன் உன் அம்மா என்னை அறையை விட்டு போகச் சொன்னார்கள் என்றான் நானே உங்களிடம் கூறவேண்டும் என்று நினைத்தேன் அப்பா வாறார் நம் காதலை ஏதும் அவரிடம் தெரியப் படுத்திவிடாதீங்கள் எனக்கும் உங்களுக்கும் ஒத்து வராது நான் தீபனை திருமணம் செய்ய யோசிக்கிறேன் என்றாள் அவன் அமைதியாக இருந்தான். ஒரு வாரத்தில் குமரன் சிந்துவின் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டான் அவளின் நினைவுகளை மட்டும் சுமந்துக் கொண்டு.

 – கோதண்டபானி நிரஞ்சலாதேவி

நன்றி : சிறுகதைகள்.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More