மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினரால் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கு சென்ற அடம்பன் பொலிஸார், மாவீரர் நாளை நினைவுகூர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழீழ தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இந்த மாதம் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரையில் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதற்காகத் தாயக தேசத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்துள்ள இடங்கள் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன.
மன்னார் மாவட்டத்தின் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்யும் பணி நேற்று இடம்பெற்றது. மாவீரர்களின் கல்லறைக்கு அகவணக்கம் செலுத்தி அஞ்சலி மேற்கொண்டு சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. அது முடிவடையும் நேரத்தில் அங்கு அடம்பன் பொலிஸார் வந்தனர்.
சிரமதானப் பணி தொடர்பில் விசாரணைகளை அவர்கள் மேற்கொண்டனர். தொடர்ந்து மாவீரர் நாளன்று – நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளை நினைவுகூர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.