தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு விருதுகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நடிகைகளும் தங்களது நடிப்பு திறமையை காண்பித்து பல விருதுகளை அள்ளிச் செல்வர். அதிலும் சில நடிகைகளில் தேசிய விருதுகளை வாங்கும் அளவிற்கு தங்களது நடிப்பை மேன்மைப்படுத்தி நடித்திருப்பர் . அப்படிப்பட்ட 7 தமிழ் நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.
அர்ச்சனா: தமிழில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக வளம் வந்த நடிகை அர்ச்சனா, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர. இதனிடையே இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய 1988ஆம் ஆண்டு வெளியான வீடு திரைப்படத்தில் நடித்த அர்ச்சனாவிற்கு, சிறந்த நடிகை என்ற தேசிய விருது கிடைத்தது. மேலும் பிலிம்பேர் விருதும் இவருக்கு கிடைத்தது. இத்திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படம் என்ற தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்ஷ்மி: தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் நடிகைகளில் லக்ஷ்மி முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். 1977ஆம் ஆண்டு வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய நாவலைத் தழுவி இயற்றப்பட்ட இத்திரைப்படத்தை இயக்குனர் பீம்சிங் இயக்கினார்.
சரண்யா பொன்வண்ணன்: நடிகை சரண்யா பொன்வண்ணன் ஆரம்ப காலகட்டத்தில் நடிகையாக பல திரைப்படங்களில் நடித்த நிலையில், இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்ததற்கு பின் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதனிடையே இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.
ஷோபா: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்த மறைந்த நடிகை ஷோபா கதாநாயகியாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இந்நிலையில் 1979 ஆம் ஆண்டு இயக்குனர் துரை எழுதி, இயக்கிய பசி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கினார்.
சுஹாசினி : 1985 ஆம் ஆண்டு வெளியான சிந்து பைரவி திரைப்படத்தில் நடித்த சுகாசினி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். இயக்குனர் பாலுமகேந்திரா எழுதி இயக்கிய இத்திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் 100 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியது. மேலும் இப்படத்திற்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது இளையராஜாவிற்கும், சிறந்த பாடகிக்கான தேசிய விருது சித்ராவுக்கும் வழங்கப்பட்டது.
பிரியாமணி : இயக்குனர் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பிரியாமணி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனிடையே இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியாமணி, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.
அபர்ணா பாலமுரளி : மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து சிறந்த கதாநாயகிக்கான தேசிய விருதை வென்றார். மேலும் இப்படத்திற்கு சிறந்த நடிகர், இசையமைப்பாளர், சிறந்த படம் உள்ளிட்ட ஐந்து தேசிய விருதுகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : செய்தி.காம்