ஈழத்தமிழர்களின் மிக முக்கியமான புலமையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை தமிழ் மொழியிலும், சாசனவியலிலும், மதங்கள் பற்றியும் ஆழ்ந்த புலமைகொண்டிருந்தார். தனது 28வது வயதிலேயே இரண்டு கலாநிதிப் பட்டங்களைப் பெற்றிருந்த அவர், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் மாணவர். வடமராட்சியில் இருக்கின்ற புலோலியில் 1936ல் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை புலோலித் தமிழ்ப்பாடசாலையிலும், பின்னர் ஹாட்லிக் கல்லூரியிலும் கற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் கடமையாற்றியவர். பின்னர் 1984 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் கடமையாற்றியவர். இது தவிர கேரளப் பல்கலைக்கழகத்திலும், திராவிட மொழியியல் நிறுவனத்திலும், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும், அரிசோனாப் பல்கலைக்கழகத்திலும், எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும் ஆய்வாளராகவும், பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி இவர் அரிசோனாவில் தனது 79வயதில் காலமான போது அறிவுப்புலம் சார்ந்தவர்கள் மத்தியில் அவர் பற்றிய நினைவுப்பகிர்வுகளும், பொது மக்கள் மத்தியில் கனத்த மௌனமும் நிலவியதை அவதானிக்க முடிந்தது. அவர் பற்றி மேலதிகமாக அறிந்து கொள்ளும் பொருட்டு தற்போது ரொரன்றோவில் வாழ்ந்து வருபவரும், பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளையை 50 ஆண்டுகளுக்கு மேலாக அறிந்தவருமான பேராசிரியர் நா. சுப்ரமணியனைத் தொடர்புகொண்டோம். எமது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தாய்வீடு வாசகர்களுக்காக பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுகின்றார் பேராசிரியர் நா. சுப்ரமணியன். கற்றாரைக் கற்றாரே காமுற்ற தருணம் அது!
- கல்விப்புலம் சார்ந்த ஈழத்து ஆளுமைகளில் மிக முக்கியமான ஒருவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை. அவரது மாணவராகக் கல்வி கற்ற நீங்கள் அவருடன் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணியும் வந்துள்ளீர்கள். உங்களுக்கும் அவருக்குமான உறவு எப்படி ஆரம்பித்தது?
பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள் எனது ஆசிரியர். 1965ம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நான் முதலாண்டு கற்றுவிட்டு 1966 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கற்கச் சென்றபோது எனக்குத் தமிழ் கற்பித்தவர் அப்போது விரிவுரையாளராக இருந்த ஆ. வேலுப்பிள்ளை அவர்கள். அவரிடம் நான்கு ஆண்டுகள் கற்றிருக்கின்றேன். அவருடன் சமகாலத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் ஆசிரியராகக் கற்பித்திருக்கின்றேன். அதன்பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 84 ஆம் ஆண்டு முதல் 90 ஆம் ஆண்டு வரையும் அவரின் கீழ் தமிழ்த்துறையில் பணியாற்றியிருக்கின்றேன். அதன் பின்னர் அவர் சுவீடனில் இருக்கின்ற உப்சலாவில் பணியாற்றிவிட்டு 95ம் ஆண்டளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தபோது கிட்டத்தட்ட 3 மாதங்கள் பணியாற்றி இருக்கின்றேன்.
- நீங்கள் கல்விகற்ற அந்தக் காலப்பகுதியில் அங்கு பல்வேறு முக்கியமான பேராசிரியர்கள் கடமையாற்றினார்கள் அல்லவா. இவர்களில் தனது ஆய்வுமுறை சார்ந்தும், ஆய்வுப் புலம் சார்ந்து பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை மற்றையவர்களிடம் இருந்து எந்த விதத்தில் வேறுபடுகின்றார்?
நாங்கள் பேராதனையில் கல்விகற்ற காலங்களில் அங்கே சு. வித்தியானந்தன், கைலாசபதி, தனஞ்ஜெயராஜசிங்கம், ஆ. வேலுப்பிள்ளை, பொ. பூலோகசிங்கம் ஆகியோர் கற்பித்தார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமான ஆளுமை கொண்டவர்கள். இவர்களில் ஆ. வேலுப்பிள்ளை அவர்களை எடுத்துக்கொண்டால் அவர் எந்த விடயம் குறித்தும் தத்துவார்த்தமாக அணுகுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு சமணம், பௌத்தம் ஆகிய தத்துவங்களில் ஆழமான அறிவு இருந்தது. பின்னாட்களில் பீற்றர் ஷாக் உடன் இணைந்து அவர் செய்த வேலைத்திட்டங்களிலும் இந்த ஆழமான அறிவு அவருக்குக் கைகொடுத்தது. இலக்கியங்களைப் பொறுத்தவரை அவரது பார்வை இலக்கியங்களின் ஊடான சிந்தனை மரபின் வளர்ச்சியை நோக்கியதாக இருந்தது, அதுபோல இலக்கணத்தைப் பொறுத்தவரை அவரது பார்வை வரலாற்றிலக்கணப் பார்வை.
இலக்கிய வரலாறு தொடர்பாக வெளியான அவரது முக்கியமான நூல் “தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்”. இன்றுவரை தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பாக வெளிவந்த முக்கிய நூல்களில் ஒன்றாகவும், பலரது சிந்தனைத் தளத்தினை உருவாக்கிய நூலாகவும் நான் இதனைக் கருதுகின்றேன். பிற்காலத்தில் நானும் துணைவியாரும் எழுதிய இந்தியச் சிந்தனை மரபின் வளர்ச்சி என்கிற நூலுக்கு உந்துதலாக அமைந்ததுவும் பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள் எழுதிய தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும் என்ற நூலே.
- ஆனாலும் அவரது பிரதான ஆய்வுகள் சாசனவியல் சார்ந்தன அல்லவா? பாண்டியர்காலக் கல்வெட்டுகளில் தமிழ்மொழி நிலை என்பதுதானே அவரது கலாநிதி பட்டத்திற்கான ஆய்வு?
நிச்சயமாக பேராசிரியர் வேலுப்பிள்ளையின் தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், தமிழ் மொழியின் வரலாற்றிலக்கணம் ஆகிய முக்கியமான நூல்களைக் குறிப்பிடும்போது அவற்றுடன் சேர்த்து அவருக்கு சாசனவியலில் இருந்த புலமையையும் குறிப்பிடப்படவேண்டும். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் அவர் 1959ல் அவர் சிறப்புத் தகுதியுடன் சித்தியடைந்து துணை விரிவுரையாளராகப் பணியேற்கும்போதே அவர் கலாநிதி பட்டத்திற்கான ஆய்விற்கும் பதிவுசெய்கின்றார். அப்போது முதல் வகுப்பில் சித்தியடைந்தால் முதுகலைமாணி பட்டம் பெறாமலே கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொள்ளலாம் என்று இருந்தது. அவர் முதலாவது வகுப்பிலும், முதலாவது மாணவராகவும் சித்தியடைந்தார். அவரது அந்த ஆய்வானது நீங்கள் குறிப்பிட்டது போலவே சாசனவியல் சார்ந்தது. அவர் சாசனவியல் சார்ந்து தன் கலாநிதி ஆய்வினைச் செய்யக் காரணமாக இருந்தவர் அதற்கு முன்னரே சாசனவியல் சார்ந்து தன் கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வினைச் செய்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை. கலாநிதிப் பட்டத்திற்கான தனது ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்த பின்னர் அவருக்கு இங்கிலாந்து வரும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அங்கு புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 1962 முதல் 1964 வரையான காலப்பகுதியில் அங்கும் ஒரு ஆய்வினைச் சமர்ப்பித்து கலாநிதிப்பட்டத்தினைப் பெற்றுக்கொள்ளுகின்றார்.
- சாசனவியல் என்பது இன்றும் கூட ஆய்வாளர்கள் மத்தியில் மட்டுமே பிரபலமான துறையாகவே விளங்குகின்றது. சாதாரண வாசகர்களுக்கும், பொது மக்களுக்கும் இன்னமும் அந்த ஆய்வுகள் எவ்விதம் நடக்கின்றன என்பது பற்றிய பூரணமாக விளக்கம் இல்லை. பேராசிரியர் அவர்களின் ஆய்வுகள் எந்த அடிப்படைகளில் அமைந்தவை என்று கூற முடியுமா?
தமிழ் மொழியைப் பொறுத்தவரை எமக்கு பேச்சு மொழி என்றும் எழுத்து மொழி என்றும் இரண்டு வழக்குகள் உண்டு. எமது பழைய இலக்கியங்களும் இலக்கண நூல்களும் எழுத்து வழக்கினைப் பற்றியே பேசுகின்றன. ஆனால் சங்க காலங்களிலும், அதற்குப் பிற்பட்ட அறநெறிக்காலம், பக்திநெறிக்காலம் போன்றவற்றிலும் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி இந்தக் காலப்பகுதிக்குரிய இலக்கியங்களில் வழங்கப்படும் மொழியா என்பது முக்கியமான கேள்வி. இவற்றுக்கான பதில்களை சாசனவியல் பற்றிய தனது ஆய்வுகளின் ஊடாக ஆராய்ந்தார் பேராசிரியர் வேலுப்பிள்ளை. இந்த சாசனங்களை ஆராய்ச்சி செய்த வேலுப்பிள்ளையும், கணபதிப்பிள்ளையும் கண்டறிந்தது என்னவென்றால், இந்த சாசனங்களில் இருக்கின்ற மொழியானது மக்களின் மொழியாக, பேச்சு மொழியாக இருக்கின்றது என்பதாகும். பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் உடையார் மிடுக்கு உள்ளிட்ட பெரும்பாலான நாடகங்கள் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் – குறிப்பாக வடமராட்சிப் பேச்சுத் தமிழில் – அமைந்தவை என்பது இங்கே முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியது.
இதன் பிறகு தமிழ் இலக்கண நூல்களில் பேச்சுமொழி பற்றி குறிப்பிடப்படுகின்றதா என்று ஆராய்ந்தார் வேலுப்பிள்ளை. தொல்காப்பியமோ அல்லது நன்னூலோ முதன்மையாக எழுத்து மொழிக்கான நூல்கள். அவற்றில் மேலோட்டமாக பேச்சுமொழி பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதே நேரத்தில் ஒப்பீட்டளவில் அதிகமாக வீரசோழியத்தில் பேச்சுமொழி பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. இவற்றையெல்லாம் உள்வாங்கி வேலுப்பிளை எழுதிய நூலே 1966ல் வெளியான “தமிழில் வரலாற்றிலக்கணம்”. எமக்கு முன்னர் இருந்த இலக்கண நூல்களில் வரைவிலக்கணங்களும், விளக்கங்களுமாக இருக்கும். “தமிழ் வரலாற்றிலக்கணம்” நூலில் தொல்காப்பியம் சொல்வதை நன்னூல் எவ்விதம் சொன்னது? அதனை பின்னர் நாவலர் எவ்விதம் சொன்னார்? இந்த மாற்றங்கள் எவ்விதம் நிகழுகின்றன? இன்றைய மொழிக்கு இலக்கணம் இருக்கின்றதா? என்கிற கோணத்தில் ஆராய்ந்தார். கிட்டத்தட்ட 50, 60 களிலேயே தமிழில் மொழியியல் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. மொழியியல் ஊடான பார்வையின் புரிதலுடன் அவர் இந்த ஆய்வுகளை முன்னெடுத்தார். அன்று தெ.பொ. மீனாட்சிசுந்தரம் போன்றவர்களும் கிட்டத்தட்ட இதே பார்வையுடன் ஆய்வுகளைச் செய்தார்கள் என்றாலும், முழுமையான வடிவில் தமிழ் வரலாற்று இலக்கணத்தை எழுதியவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்களே.
வழமையாக நூல் ஆசிரியர்கள் தமது நூல்களிள் உதாரணங்களைக் காட்டும்போது சங்க இலக்கியங்களில் இருந்தோ, தேவாரம், திருவாசகம் போன்றவற்றில் இருந்தோ அல்லது கம்பராமாயணம் போன்றவற்றில் இருந்தோ தான் உதாரணங்களைக் காட்டுவார்கள். ஆனால் வேலுப்பிள்ளை தனது நூலில் முன்னர் வழங்கப்பட்ட உதாரணங்களுடன், ஏற்கனவே சாசனவியல் ஆய்வுகளில் தான் சேகரித்து வைத்திருந்த சொற்றொடர்களையும் உதாரணங்களாகக் காட்டி இப்படியான மரபும் இருந்திருக்கின்றது என்று முன்வைத்தார். இதன் மூலமாக இலக்கண மொழியில் இருந்த உதாரணங்களையும், மக்கள் மொழியில் (பேச்சுமொழியில்) வழங்கிய உதாரணங்களையும் ஒரே நேரத்தில் குறிப்பிட்டு அவற்றுக்கிடையான வேறுபாட்டை வாசகர்கள் அறியக்கூடியதாக இருந்தது. ஒரு விதத்தில் இது சமூகத்தை நோக்கிய ஒரு பார்வைதான். அதே நேரத்தில் மொழிக்கான இலக்கணம் என்பது எக்காலத்துக்கும் நிரந்தரமானது அல்ல. அதற்கான இயங்கியல் உண்டு என்பதையும் அவர் முன்வைத்தார். “
- இந்த ஆய்வுகளை அவர் செய்யும்போது அவருக்கு முன்னோடிகளாக தமிழ்ச்சூழலில் இருந்தவர்கள் யார்?
தமிழில் முதலாவது கலாநிதிப் பட்டம் பெற்றவர் 1930ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில்Dr. P.S. சுப்பிரமணிய சாஸ்திரி. அவரது History of Grammatical Theories of Tamil என்கிற தொல்காப்பியம் குறித்த நூல் வேலுப்பிள்ளைக்குப் பயன்பட்டுள்ளது. அத்துடன் பேராசிரியர் மு.வரதராசன் வெளியிட்ட மொழிநூல், சீனிவாசன் வெளியிட்ட மொழியியல் போன்ற நூல்களையும் ஆராய்ந்து வேறு தகவல்களையும் திரட்டிக்கொண்டு, இவர்களது நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற மூல நூல்களையும் ஆராய்ந்து தமிழ் வரலாற்றிலக்கணத்தை எழுதுகின்றார் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை. இவ்வாறு எழுதுகின்ற போது ஏற்படுகின்ற கருத்து வேறுபாடுகளையும் தனது நூலில் ஆங்காங்கே சுட்டிக்காட்டுகின்றார் வேலுப்பிள்ளை. ஆனாலும் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளையின் தமிழ் வரலாற்று இலக்கணத்தில் இருக்கின்ற வரலாற்று ஓட்டம் அவர்களின் நூலில் இருக்காது. வேலுப்பிள்ளையின் மாணவன் என்ற வகையிலும் பின்னர் இதே நூலைக் கற்பித்தவன் என்ற வகையிலும் என்னால் இதை அழுத்தமாகக் கூறமுடியும்.
- முன்னேஸ்வரம் கோயில் பற்றி அவர் செய்த ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள் பற்றி அவரது இறப்பின் பின்னர் அவர் பற்றி படிக்கின்றபோது தெரிந்துகொண்டேன். இது போல சாசனவியல் சார்ந்து அவரது வேறு முக்கிய பங்களிப்புகளைக் கூறமுடியுமா?
அவர் சாசனமும் தமிழும் என்று ஒரு நூலே எழுதி இருக்கின்றார். சாசனவியல் தொடர்பான அவரது பார்வையும் ஆய்வுகளும் மிக முக்கியமானவை. இவை தொடர்பாக அந்தத் துறை சார்ந்தவர்கள் பேசுவதே சிறப்பாகவும், அவரை ஆழமாக அறிந்துகொள்ள வழிதருவதாகவும் இருக்கும். இன்று கலைச்சொல்லாக்கம் பற்றி பரவலாக பேசப்படுகின்றது. அதற்கு உதவக்கூடிய பல சொற்கள் ஏற்கனவே சாசனங்களில் இருக்கின்றன. உதாரணத்துக்கு Towel என்பதற்கு நல்ல தமிழ் சொல்லாக ஒற்றாடை (நீரை ஒற்றுகின்ற ஆடை) என்ற சொல் சோழர் கால சாசனங்களில் இருக்கின்றது. தமிழில் சாசனவியல் கற்பிக்கப்படவேண்டும் என்பதையும் முறையாக புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்திச் சொல்லியுள்ளார். சாசனங்களில் எழுத்துகளின் வடிவம், வளர்ச்சி போன்றன தொடர்பாகவே பெரிதும் ஆய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் அதனை இலக்கண வரலாற்றுடன் இணைத்துப் பார்த்ததிலேயே பேராசிரியர் வேலுப்பிள்ளை மற்றவர்களிடம் இருந்து தனித்தும் சிறந்தும் தெரிகின்றார்.
இவரும் பேராசிரியர் இந்திரபாலாவும் சம காலத்தவர்கள். இருவரும் சாசனவியல் துறையில் ஆய்வுகளில் ஈடுபட்டவர்கள். அப்போது பேராசிரியராக இருந்த செல்வநாயகம் அவர்களின் வழிகாட்டலில் மைசூர் சென்று அங்கு இடம்பெற்ற சாசனவியல் ஆய்வுகளில் பயிற்சி பெற்று நாடு திரும்பினர், அதற்குப் பிறகும் இந்தியா சென்று பல ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார். அவரது ஆய்வுகள் மிகப்பெரும் இரண்டு தொகுதிகளாக வெளியாகி இருக்கின்றன. இவையெல்லாம் அவர் செய்த மிகப் பெரிய பங்களிப்புகள்
- பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்களின் இன்னொரு முக்கிய பங்களிப்பு தமிழர் சமய வரலாறு என்கிற நூல். இன்று தமிழ் பௌத்தம், சமணம் பற்றிப் பரவலாக கல்வியாளர்கள் மத்தியில் பேசப்படுகின்றது. ஆனால் வேலுப்பிள்ளை அவர்களது ஆய்வு தமிழ் சமய இலக்கியங்களில் பௌத்தம், சமணம், வைணவம், சைவம் ஆகியவற்றோடு இருந்த தொடர்புகள் குறித்தது என்று கருதுகின்றேன். இதுபற்றி விளக்கமாகக் கூறமுடியுமா?
தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தத்துக்கும் சமணத்துக்கும் மிக நீண்ட காலத் தொடர்பு உண்டு. சமண பௌத்த கருத்துகள் எவ்விதம் திருக்குறளை வழிநடத்தி இருக்கும், நாவுக்கரசர் தேவாரங்களில் எப்படி சமணத் தத்துவங்களின் தாக்கம் இருக்கும், இது போல தமிழின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளில் பௌத்த, சமண, சைவ, வைணவ தத்துவங்கள் செலுத்திய தாக்கம் பற்றிய ஆய்வுகளே அவரது இந்த நூல்கள். கிட்டத்தட்ட இதே காலத்தில் மயிலை சீனி வேங்கடசாமியும் சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும் ஆகிய நூல்களை எழுதினார். இந்தத் தாக்கமும் அவருக்கு நிச்சயம் இருந்திருக்கும். பின்னாட்களில் அவர் பீற்றர் ஷாக் உடன் செய்த ஆய்வுகளில் அவருக்கு இருந்த ஆழமான சமய அறிவு பெரும்பங்களித்திருக்கின்றது.
- ஆரம்பத்தில் அவரது இலக்கிய வரலாற்றுக்கான பங்களிப்புப் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். அது பற்றி சற்று விளக்கமாகக் கூறமுடியுமா?
இலக்கிய வரலாறு எழுதுகின்ற வழக்கம் சென்ற நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டது. எழுநா பதிப்பகம் ஊடாக வெளியிடப்பட்ட சரவணமுத்துப்பிள்ளையின் தமிழ்ப்பாஷையின் மீள்பதிப்புக் கூட அந்த வகையானது தான். இவ்வாறு எழுதுகின்றபோது ஒரு வகையானவர்கள் ஆண்டுகளை வைத்துக் காலங்களைப் பிரித்து வரலாற்றை எழுதினார்கள். இன்னொரு வகையானவர்கள் வெவ்வேறு கால கட்டங்களாக (உதாரணமாக ஆட்சியாளர்களைக் கொண்டு பல்லவர் காலம், சோழர்காலம், நாயக்கர் காலம் … என்கிற பிரிப்புகள்) பிரித்தார்கள். இந்த வகையில் பேராசிரியர் செல்வநாயம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்கிற நூல் முக்கியமானது. 1969 இல் பேராசிரியர் ஆ. வேலிப்பிள்ளையின் “தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்” என்ற நூல் வெளியானது. இதில் அவர் இயற்கை நெறிக்காலம், அற நெறிக்காலம், சமய நெறிக்காலம், தத்துவ நெறிக்காலம், அறிவியல் நெறிக்காலம் என்கிற வகையில் காலகட்டங்களைப் பிரித்தார். ஆட்சியாளர்களையோ, ஆண்டுகளையோ கருத்தில் கொள்ளாமல், இக்காலங்களில் தோன்றிய இலக்கியங்களுக்கான உயிரோட்டம் என்ன என்பதை அடிப்படையாக வைத்து இந்தப் பிரிவுகளை செய்தார் பேராசிரியர் வேலுப்பிள்ளை. உணர்வோட்டங்களை வைத்து கால கட்டங்களைப் பிரிக்கின்ற முறைமையை வேலுப்பிள்ளைக்கு முன்னரே கே. என். சிவராஜபிள்ளை என்கிற அறிஞர் Chronology of the early tamils என்கிற நூலில் 1932லேயே இயற்கை நெறி, அற நெறி, சமய நெறி என்கிற விதத்தில் காலங்களை பிரிக்கலாம் என்று கூறி இருந்தார். அதன் பின்னர் 1950களில் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரும் இதே விதமான பகுப்புகளைச் செய்திருந்தார். இதனை முழுமையாகச் செய்தவர் ஆ. வேலுப்பிள்ளை அவர்களே. ஒரு உதாரணத்துக்கு சங்ககாலம், சங்க இலக்கியம் என்று சொல்வதை இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த வாழ்வியலை மக்கள் கொண்டிருந்த காலம்; இது எவ்விதம் அவர்களது இலக்கியங்களில் தாக்கம் செலுத்துகின்றது என்கிற பார்வையுடன் முன்வைத்தார். அதற்கு அடுத்த காலகட்டத்தை அறநெறிக்காலம் என்றும், அது போரை மையப்படுத்திய இயற்கை நெறிக்காலம் மீதான விமர்சனமாக எழுந்தது என்றும் குறிப்பிட்டார். உதாரணமாக அவர் சொல்லுவார், புறநானூறு மீது தமிழ்ப் பண்பாடு வைத்த விமர்சனம் தான் திருக்குறள் என்று! தமிழர்களின் அற மரபு பற்றி அறிய விரும்புபவர்கள் எல்லா நூல்களையும் வாசிக்க முடியாவிட்டாலும் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை எழுதிய அறநெறிக்காலம் என்கிற கட்டுரையையாவது வாசிக்கவேண்டும். அது ஒரு பொக்கிஷம் என்றே சொல்வேன்.
- அப்படியாக இருந்தும் அவர் பொதுமக்கள் மத்தியில் பெரிதாக அறியப்படவில்லை அல்லவா? எம்மவர்கள் பலருக்கு பேராசிரியர் கைலாசபதி, வித்தியானந்தன், சிவத்தம்பி, க. கணபதிப்பிள்ளை போன்ற பல ஆளுமைகள் பற்றிய சரியான அறிமுகம் கிடைக்கவில்லைத்தானே. இவர்களுடன் ஒப்பிடும்போது பேராசிரியர் வேலுப்பிள்ளை பற்றி அறிந்தவர்கள் இன்னமும் வெகு குறைவானவர்கள் அல்லவா?
ஆம். அவரது ஆய்வுகள் ஆய்வாளர்களுக்கே அதிகம் பயன்படுவன. அவற்றில் இருந்து ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைத் தொடர உதவுபவை. சராசரி வாசகர்களுக்கு அவை நேரடியாகப் பயன்படா. மேலும் அவர் ஈடுபட்ட துறை சாசனவியல் என்பதால் அவரது ஆய்வுகள் பெரும்பாலும் மக்களுடன் ஊடாட்டமின்றி தனிப்படவே இருந்தன. தவிர அவர் ஆய்வாளனாகவும், கல்வியாளனாகவும் தனது பணி அவற்றில் தொடர்ச்சியாக ஈடுபடுவது என்பதையே தனது நிலைப்பாடாகத் தொடர்ச்சியாகப் பேணி வந்தார். இதனால் அவர் தன்னை சமூகமயமாக்காமல் தனியாகவே இருந்து வந்தார். அவருடைய நூல் ஒன்றுக்கு சாகித்ய மண்டல பரிசு அறிவித்திருந்தார்கள். விழா கம்பளையில் இடம்பெற்றது. அப்போது அவர் பேராதனையில் இருந்தார். கம்பளைக்கும் பேராதனைக்கும் வெறும் 16 மைல் தூரமே தான். ஆனாலும் அவர் விழாவில் கலந்துகொள்ளவில்லை. தனக்கான கௌரவமும், சம்பளமும் தனது ஆய்வுகளுக்கே, விழாக்களில் கலந்துகொள்ள அல்ல என்று தன்னை முற்றாக ஒதுக்கிக்கொண்டவராக அவர் இருந்தார். பொதுமக்கள் பார்வையில் அவர்களைப்போல இவர் இல்லையே என்று நாம் கவலைப்படத் தேவையில்லை. கல்விப்புலம் சார்ந்தும், பல்கலைக்கழகத் தரம் சார்ந்தும் அவர்களுக்கு நிகரானவராகவே இவர் இருந்தார். மதிக்கப்பட்டார்.
குறிப்பு:
- பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்களின் மறைவைத் தொடர்ந்து அவர் பற்றிய பதிவொன்றினைச் செய்யும்பொருட்டு தாய்வீடு பத்திரிகைக்காக இந்நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது. நேர்காணலின்போது கூடவே இருந்த வரைகலைஞர் கருணா அவர்களுக்கும் ஏற்பாடுகளைச் செய்த சேரன் மற்றும் டிலிப்குமார் அவர்களுக்கும் நன்றி. இந்நேர்காணல் டிசம்பர் 2015 தாய்வீடு இதழில் வெளியானது.
- பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்களின் அனேகமான நூல்கள் நூலகம் திட்டத்தின் கீழ் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கான இணைப்பு: http://goo.gl/F7sUGx
- பேராசிரியர் அவர்களின் இந்தப் புகைப்படம் இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்டது.
நேர்காணல் – அருண்மொழிவர்மன் | நன்றி -https://arunmozhivarman.com/