அன்பின் தாத்தாவுக்கு
உங்கள் பேரன் எழுதுவது
தாத்தா சுகமா
தாத்தா எங்கள் வீட்டல்
முன்பு போல்
நத்தார் கொண்டாட்டம் இல்லை
நத்தார் தாத்தாவும் வரவில்லை
எங்கள் வீட்டு பூ மரம் பூக்க
மறந்து விட்டது தாத்தா
நோயும் நொடிம்
யுத்தமும் அழிவும்
பஞ்சமும் பசியும்
இனவாதமும் நிறவாதமும்
கொலையும் கொள்ளையும்
வன்முறையுமாய் மனித அவலமுமாய்
இன்னும் தான் முடிவில்லாமல்
தொடர்கிறது தாத்தா
எங்குமே மனிதத்தை
காணவில்லை தாத்தா
காலைச் சூரியன்
எங்கள் கதவடியில் வந்து
கன காலம் ஆகிவிட்டது தாத்தா
நத்தார் தினத்தை இம்முறை
உங்களோடு கொண்டாட முடியுமா தாத்தா
தேவனின் வருகையோடு
எமக்கும் எங்கும் இந்தப் பூமியிலும்
சமாதானம் வருகிறதா பார்ப்போம் தாத்தா
தீயவற்றை பார்க்காதே
தீயவற்றை பேசாதே
தீயவற்றை கேட்காதே
என்று எனக்கு நீங்கள்
அடிக்கடி கூறிய அந்த
உங்களுக்கு பிடித்தமான
காந்தியின் மூன்று குரங்குகளை
நத்தார் பரிசாக கொண்டு வருகிறேன்
தேவன் வருகையை
உங்களோடு பாடி மகிழ்வதில்
எத்தனை சந்தோசம் தாத்தா
தேவனைப் போலவே
உங்களுக்கும் குழந்தைகளின்
சிரிப்பு பிடிக்கும் தாத்தா
எல்லாக் கடவுளுமே சொல்லும் தத்துவம்
அன்பு என்ற ஒன்றே என்று
சொல்லித்தந்தீர்கள் தாத்தா
ஓடி விளையாடு பாப்பா, –
நீஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா,
– ஒருகுழந்தையை வையாதே பாப்பா.
என்று என் தங்கையை அனைத்து
நீங்கள் பாடியது நினைவு இருக்கிறது
இன்னும் இசைத்தபடியே
இருக்கிறது என் காதுகளில்
கண் போகும் தூரம் வரை
காத்துருக்கிறேன் தாத்தா
தாத்தா உங்கள் கைத்தடி
கதிர் வேட்டி பாட்டுப் பெட்டி
பத்திரமாய் எடுத்து வைத்திருக்கிறேன்
கைத்தடி மட்டும் கன காலமாய்
காத்திருக்கிறது காற்று வேண்ட
உங்களை கூட்டிப் போக
தாத்தா நீங்கள் வளர்த்த
புறாக்கள் இன்னும்
வீடு திரும்பி வரவே இல்லை
உங்களைப் போலவோ
அவைகள் எங்கு பறந்தன
நீங்கள் எங்கு போனீர்கள்
என்றறிய ஆவல் தாத்தா
தாத்தா நானும் நீங்களும் புறாக்களும்
கூடி விளையாடிய நாட்களை
நினைத்துப் பார்க்கிறேன்
பறவைகளோடு உங்கள் பாசம்
பாரதியைப் போல் தாத்தா
கூடு மட்டும் தனியாகக்
காத்திருக்கிறது தாத்தா
அருகில் உங்கள் கதிரையோடும்
நீங்கள் வாசித்து விட்டுப் போனா
புத்தகத்தின் பக்கத்தோடும்
அத்தோடு நீங்கள் எழுதிய
மனிதம் என்ற கவிதை ஒன்று
என்னோடு தான் இருக்கிறது
நீங்கள் விட்டுச் சென்ற
பக்கத்தில் இருந்து நான் தொடர்ந்து
எழுதவிருக்கிறேன் தாத்தா
வந்து விடு தாத்தா
நினைவுகள் தூங்குவதும் இல்லை
உறவுகள் தொலைவதுவும் இல்லை தாத்தா
தாத்தா நீங்கள் கோவில் கச்சேரியில்
பாடிய பாடலும் உங்கள் புல்லாங்குழல் இசையும்
என்னையும் உன்னையும் சேர்த்த
அந்த இசையோடும் அந்தக் காதலோடும்
காத்திருக்கிறேன் தாத்தா.
இப்படிக்கு
உங்கள் அன்புப் பேரன்
பதிலுக்காக இன்னும்
பார்த்திருக்கிறான் பேரன்காரன்
தபால்காரன் மட்டும் வரவே இல்லை.
“தாத்தாக்களுக்கும் பேரப்பிள்ளைகளுக்குமான அன்பு அப்பாக்களின் அன்பை விட மிஞ்சி விடும்.”
பா.உதயன்