இன்று
என் உயிர்
உடைந்து போன நாள்
நினைந்து நினைந்து
நெடுக நெடுக
அவளோடு இரு
என்று என்னை
என் மனம்
கட்டளையிட்ட நாளும்
இதுதான்
உன்னுள் இருக்கிறாள்
உன்னை இயக்குகிறாள்
எல்லா செயல்களும்
அவளிலிருந்துதான்
உருக் கொள்கின்றன
என மீண்டும் மீண்டுமாய்
உந்தித் தள்ளி
உயிர்ப்பிக்கும்
நாளும் இதுதான்
அனாமியோடு
சுனாமி இணைந்த நாள்
அகிலம் புரண்ட நாள்
அவலத்தை அலைகள்
சுவைத்த நாள்
மனிதம் ஒன்றுதான்
மகத்தானது
மற்றவை எல்லாம்
வெறும் புளுகும்
புனைவும் என புத்தி உறைக்க
சொன்ன நாளும் இதுதான்..
–+++++—
தீர்த்தக் கரையினிலே
உன் உடலம்
சோர்ந்து கிடக்கையிலே
தூக்கியெடுத்து
மடியில் மனம் பதைக்க
மார்பில் அணைக்கையிலே
நான் மாண்டு போனேனடி
என் செல்ல மகள் கண்ணே
ஒரு தரம் கண் திறந்து
உயிர் கொண்டு வருவாயா
அலறித் துடித்து
ஏங்கித் தவித்து
உன் இரு விழி மூடிய நாள்
கரு விழிகள் காட்டிய
அத்தனை மொழிகளும்
அடங்கிப் போன நாள்
ஆனாலும்
மீண்டும் மீண்டும்
உயிர்பாய் என்னுள்.
பாலசுகுமார்