வவுனியாவில் கோபிதன் ஆடைத்தொழிலகம் என்னும் சிறு கைத்தொழில் நடாத்திவரும் திருமதி கோகிலாதேவி அசோக்குமார் இன்று பல விருதுகளையும் பெற்று மிகச்சிறந்த ஆடைத்தொழிற்சாலையை விருத்தி செய்து வருகின்றார். யாழ்ப்பாணத்தில் பிறந்து படிப்புக்காக வவுனியா வந்தவர் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கணக்கியில் மற்றும் நிதியியலில் பட்டப்படிப்பை நிறைவு செய்து இத்தொழிலில் கவனத்தைச் செலுத்தியுள்ளார்.
பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிவரும் இவர் தனது பயணம் பற்றி விபரிக்கின்றார்;
2000 ம் ஆண்டு ஜனவரி மாதம் சிறு தையல்கடையாக ஆரம்பித்து வழமையான தையல் வேலைகளை செய்து வந்தோம். பின்னர் 2002 ம் ஆண்டு சிறுகைத்தொழிலாக பிரதேச செயலகத்தில் பதிவு செய்து கைத்தொழிலாக ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் நானும் எனது சகோதரிகளான லதா (தற்போது லண்டனில் வசிக்கிறார் , கிருஷா (தற்போது சுவிச்சர்லாந்தில் வசிக்கிறார்) மூவருமாக வேலைசெய்தோம் . பின்னர் “கோபிதன் ஆடைத்தொழிலகம்” என்ற பெயரில் சிறு கைத்தொழிலாக பதிவு செய்து ரெடிமேட் ஆடைகளைத் தயாரித்து கடைகளிற்கு வழங்கத் தொடங்கினோம்.
எமது வடிவமைப்புக்களிற்கு மக்களிடம் நல்ல வரவேற்ப்பு காணப்பட்டதால் எமது தொழிலை சிறிது சிறிதாக விருத்திசெய்தோம் இதில் இலங்கை வங்கியினால் வழங்கப்பட்ட கடன் எமக்கு பயனுள்ளதாக அமைந்தது. மிகவும் சிறு வயதில் எமது தந்தையை இழந்த எமக்கு ஆண் சகோதரர்களும் இல்லாத நிலையில் எமது தாயாரின் உதவியுடனும் எனது கணவனின் உதவியுடனும் எமக்கு இயங்கக்கூடியதாக இருந்தது.எனது பட்டப்படிப்பு எனக்கு பயனுள்ள வகையில் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு உதவியது . நானும் வழமையான பட்டதாரிகள் போன்று அரசாங்க உத்தியோகத்திற்கான நியமனத்தையும் பெற்று கடந்த 2005 ம் ஆண்டிலிருந்து 2014 ம் ஆண்டுவரை அரச சேவையிலும் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றி எனது சேவையை மக்களிற்கு வழங்கி தற்போது அதிலிருந்து விலகி எனது கம்பனியை முழுமையாக நடாத்திக் கொண்டிருக்கிறேன்.
ஆரம்ப மூலதனமாக ஒரு தையல் இயந்திரம், ரூபா 25,000.00 மற்றும் 3 தொழிலாளர்கள் என ஆரம்பித்து தற்போது 50 தையல் இயந்திரங்கள், 50 ற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் என உசைத் நிறுவனத்தின் நிதி உதவியுடன் விஸ்தரிக்கப்பட்டு தற்போது வடமாகாணத்தின் உள்ளூர் தேவைகளுக்கான ஆடைகளை சந்தைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு நிறுவனமாக இயங்கிவருகிறது . எம்மிடம் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள அனைவரும் பெண்கள் ஆவர் இவர்களில் போரினால் பாதிக்கப்பட்டவர்களும் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற குடும்ப பெண்களும் உள்ளடங்குகிறார்கள். இவர்களிற்கு நியாயமான சம்பளம் ஊழியர் சேமலாப நிதி, நலன்புரிச் சேவைகள் போக்குவரத்திற்கான துவிச்சக்கர வண்டி அனைத்தும் எம்மால் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாணம் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த நாங்கள் போர் காரணமாக ஏனையவர்களைப்போல் ஒன்றுமில்லாத நிலையிலேயே வவுனியா மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தோம் தற்போது எமது விடாமுயற்சியின் பயனாக எமது நிறுவனத்தை வளர்த்தெடுத்து ஐம்பதிற்கு மேற்பட்ட குடும்பங்களிற்கு வாழ்வாதாரத்தை வழங்கிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
சாதனைப் பெண்களின் வரிசையில் இடம்பிடித்த கோகிலாதேவி அசோக்குமார் இன்று பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு ஒளிவிளக்காக காணப்படுகின்றார். போரின் விளைவுகளில் சிக்கியுள்ள சமுகத்தில் தனது பங்களிப்பினை பதிவு செய்து வளர்ந்து வரும் இந்த சுயமுயற்சியாளரை வணக்கம் லண்டன் இணையமும் வாழ்த்துகின்றது.
– மிதுனா சுரேஷ்குமார் –