செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை பெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள் | பகுதி 2பெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள் | பகுதி 2

பெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள் | பகுதி 2பெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள் | பகுதி 2

4 minutes read

(2) குறுந்தொகை:- கடைச் சங்கத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் ‘மயிலியல் செறிஎயிற்று அரிவை கூந்தல்’ (2-3,4) என்றும், ‘மௌவல் நாறும் பல்லிருங் கூந்தல்’ (19-4,5) என்றும், ‘அகவன் மகளே! அகவன் மகளே! மனவுக் கோப்பன்ன நன்நெடுங் கூந்தல் அகவன் மகளே பாடுக பாட்டே’ (23-1,2) என்றும், ‘வாலிழை மகளிர்’ (45-2) என்றும், ‘தேமொழித் திரண்ட மென்றோள்’ (72-3) என்றும், ‘வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு’ (82-1) – நீட்சி பொருந்திய கடைகுழன்றுள்ள கூந்தலைக் கோதி முதுகிடத்தே சேர்ந்து – என்றும், ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’ (135-2) என்றும், ‘மனையோள் மடமையிற் புலக்கும்’ (164-5) என்றும், ‘குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்’ (208-3) என்றும், ‘பசுப்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர்’ (287-4,5) என்றும், ‘ஓரை மகளிர்’ (316-5, 401-3) என்றும், ‘கடலாடு மகளிர்’ (326-2) என்றும் பெண் பெருமை பேசும் சீரினையும் காண்கின்றோம்.

 

(3) கலித்தொகை:- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகை நூலின் பாலைக் கலியில் ‘நிலைஇய கற்பினாள்’ (1-13)  என்றும், ‘எல்வளை’ (12-10) என்றும், ‘நலம்பெறு சுடர்நுதால்!’ (12-14) என்றும், ‘கிளிபுரை கிளவியாய்!’ (12-18) என்றும், ‘பணைத் தடமென்தோள், ஏந்துஎழில் மலர்உண்கண், நிரைவெண்பல், மணம்நாறு நறுநுதல், இருங்கூந்தல்’ (13-1,2,3,4) என்றும், ‘முளைநிரை முறுவலார்’ (14-25) என்றும், ‘புனையிழாய்!’  (15-9) என்றும், ‘ஒளியிழாய்!’ (15-13) என்றும், ‘ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய்’ (19-11) என்றும், ‘மாண்எழில் வேய்வென்ற தோளாய்!’ (19-15) என்றும், குறிஞ்சிக்கலியில் ‘கயமலர் உண்கண்ணாய்!’ (1-1) என்றும், ‘நறுநுதால்’ (1-12) என்றும், ‘சுடர்த் தொடீஇ!’ (15-1) என்றும், ‘மான்நோக்கின் மடநல்லாய்’ (20-17) என்றும், ‘திருந்திழாய்!’ (29-1) என்றும், மருதக்கவியில் ‘அணைமென்தோள்’ (1-9) என்றும், ‘ஒளிபூத்த நுதலாரோடு’ (1-19) என்றும், முல்லைக்கலியில் ‘நறுநுதால், நெட்டிருங் கூந்தலாய்’ (5-53,57) என்றும், ‘தாதுசூழ் கூந்தள்’ (11-12) என்றும், நெய்தற்கலியில் ‘நன்னுதால்!’ (15-9) என்றும் பெண்ணைச் சிறப்பித்துப் பேசும் பாங்கினையும் காண்கின்றோம்.

 

(4) ஐங்குறுநூறு:- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூறு பெண்ணழகைக் கூறும் சீர் இவை. ‘நன்நெடுங் கூந்தல்’ (153-5) என்றும், ‘பணைத்தோள், ஒண்தொடி அரிவை’ (171-3,4) என்றும், ‘ஒண்தொடி அரிவை கொண்டனள்’ (172-1) என்றும், ‘கொய்தளிர் மேனி’ (176-4) என்றும், ‘மகளிர் நீர்வார் கூந்தல்’ (186-2) என்றும், ‘இரும்பல் கூந்தல்’ (191-2)  என்றும், ‘கொழும்பல் கூந்தல் ஆய்தொடி’ (196-1,2) என்றும், ‘வளையணி முன்கை வாலெயிற்று அமர்நகை’ (198-1) என்றும், ‘வீங்கு எல்வளை! ஆய்நுதல் கவின’ (200-1) என்றும், ‘குவளை உள்ளகங் கமழும் கூந்தல்’ (225-2,3) என்றும், ‘நின் மென்தோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும்’ 230-2,3) என்றும், ‘சாந்தம் நாறும் நறியோள் கூந்தல் நாறு நின்மார்பே’ (240-3,4) என்றும், ‘காந்தள் நாறும் வண்டிமிர் சுடர்நுதல் குறுமகள்’ (254-2,3) என்றும், ‘மடமகள் வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி வளையள் முளைவாள் எயிற்றள்’ (256-1,2,3) என்றும், ‘திருந்திழை அரிவை!’ (355-1) என்றும், ‘அணிஇழை’ (359-4) என்றும், ‘தாழிருங் கூந்தல்’ (411-4) என்றும், ‘தாதார் பிரசம் மொய்ப்ப போதார் கூந்தல்’ (417-3,4) என்றும், ‘நன்னுதல்!’ (426-2) என்றும் ‘முல்லை நாறுங் கூந்தல்’ (446-1) என்றும் கூறும் செய்திகளை ஐங்குறுநூறு நூலில் நாம் நுகர்கின்றோம்.

(5) பதிற்றுப்பத்து:-  எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் ‘ஒள் இழை மகளிரொடு’ (13-21) என்றும், ‘சுடர் நுதல், அசைநடை உள்ளளும் உரியள்’ (16-13) என்றும், ‘முகிழ் நகை, மடவரல், கூந்தல் விறலியர்’ (18-5,6) என்றும், ‘வாள் நுதல் அரிவை’ (19-14) என்றும், ‘கார் மலர் கமழும், தாழ் இருங் கூந்தல்’ (21-33) என்றும், ‘வளை மகள்’ (23-23) என்றும், ‘எல் வளை மகளிர்’ (27-7) என்றும், ‘வளைக் கை மகளிர்’ (29-2) என்றும், ‘ஒண் நுதல் மகளிர்’ (30-28) என்றும், ‘வண்டு பட ஒலிந்த கூந்தல், அறம் சால் கற்பின், ஒள் நுதல்’ (31-23,24,25) என்றும், ‘சில் வளை விறலி! மெல் இயல் மகளிர்’ (40-21,23) என்றும், ‘கார் விரி கூந்தல், சேயிழை மகளிர்’ (43-1,2) எனவும், ‘இழையர், குழையர், நறுந் தண் மாலையர், சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை, திறல் விடு திருமணி இலங்கு மார்பின், வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர்’ (46-1,2,3,4) என்றும், ‘நல் நுதல் விறலியர்’ (47-7) என்றும், ‘ஒள் நுதல் விறலியர்’ (48-2) என்றும், ‘வரி மென் கூந்தல்’ (50-19) என்றும், ‘சில் வளை விறலி!’ (57-6) என்றும் பெண் பெருமை பேசுவதையும் காண்கின்றோம்.

(6) நற்றிணை:- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் ‘மனைமாண் இனியோள்’ (3-8,9) என்றும், ‘சுணங்கனி வனமுலை’ (9-6) என்றும், ‘தேம்பாய் மரா அம் கமழும் கூந்தல்’ (20-3) என்றும், ‘திருந்திழை மகளிர்’ (40-4) என்றும், ‘மாயக் குறுமகள்’ (66-11) என்றும், ‘சில்வளைக் குறுமகள்’ (90-9) என்றும், ‘நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள்’ (93-8) என்றும், ‘குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிர்’ (116-11) என்றும், ‘பிறைநுதல்’ (120-7) என்றும், ‘விரிஒலி கூந்தல்’ (141-12) என்றும், ‘அணிநுதற் குறுமகள்’ (147-1) என்றும், ‘ஒள்ளிழை மகளிர்’ (155-1) என்றும், ‘ஐம்பால் வகுத்த கூந்தல், செம்பொறித் திருநுதல்’ (160-6,7) என்றும், ‘மடக்கண் தகரக் கூந்தல், பணைத்தோள், வார்ந்த வால் எயிறு’ (170-1,2) என்றும், ‘குவளை யுண்கண், இவள் மாமைக் கவினே!’ (205-6,11) என்றும், ‘ஒழுகுநுண் நுசுப்பு, தெளிதீங் கிளவியாள்’ (245-5,6) என்றும், ‘பொற்றொடி மகளிர், நெருங்கேர் எல்வளை’ (258-5,11) என்றும், ‘மேனி, கண், சாயல், கிளவி, வனப்பு, கமழ் கூந்தல்’ (301) என்றும் பெண்களைப் பற்றிப் புகழ்ந்து, பாராட்டிப் பேசியுள்ள சீரினையும் காண்கின்றோம்.

(7) சிலப்பதிகாரம்:- ஐம்பெரும் காப்பியங்களில் தலைசிறந்து விளங்கும் நூலான இளங்கோவடிகள் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டு) யாத்த சிலப்பதிகாரத்தில் பெண்ணழகு பேசப்படும் பாங்கினையும் காண்போம். ‘போதிலார் திருவினாள் (கண்ணகி) புகழுடை வடிவினாள்’ (1-26) என்றும், ‘மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! கரும்பே! தேனே! ஆருயிர் மருந்தே! தாழிருங் கூந்தல் தையால்! (2-73,74,75,80) என்றும், ‘செம்பொற் கைவளை, பரியகம், வால்வளை, பவழப் பல்வகை அணிந்து’ (6-92,93) என்றும், ‘குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி’ (12-23) என்றும், ‘இணைமலர்ச் சீறடி’ (12-45) என்றும், ‘கொங்கைச் செல்வி! தென்தமிழ்ப் பாவை! செய்தவக் கொழுந்து!’ (12-47,48) என்றும், ‘பெருமனைக் கிழத்தி’ (13-57) என்றும், ‘பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்! நாணின் பாவாய்! நீணில விளக்கே! கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி!’ (16-89,90,91) என்றும் சிலம்பு பெண்ணழகைப் பேசுகின்றது.

 

 

 

தொடரும்…

 

 

 

நன்றி : பதிவுகள் | பெண்ணியம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More