இந்தியா – தமிழ்நாட்டில் ‘எச்.3 என்-2’ எனும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிவருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் காய்ச்சலால் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும் எனக் கூறப்படுகின்றது.
இந்தியா முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காய்சலில் தமிழகத்தில் குழந்தைகள் உட்பட பலர் பீடிக்கப்பட்டுள்ளனர்.
அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானவர்கள் இதற்கான சிகிச்சையை பெற்று வருகின்றனர்.
இது பற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவத்துள்ளதாவது, “புதுவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
“இந்த சிறப்பு மருத்துவ முகாம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10ஆம் திகதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் சென்னையில் மாத்திரம் 200 முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சனக்கூட்டம் நிரம்பிய இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முகக் கவசம் அணிதல் போன்ற சுய கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிக்குமாறு, பொதுமக்களுக்கு தமிழக மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.