தெரு விளக்கின் புனைவில் இரவு சற்றுத் தனித்திருந்த வேளை, தெருக்களில் திட்டுத்திட்டாய் மக்கள் கூட்டம், கூடிப் பேசிக் கொண்டது அங்கு தங்கிப் போன காற்றுக்குத் தான் தெரியும். நான்கு தெருக்கள் கொண்ட ஊர் அந்த ஒற்றைத் தெருக்கள் நிறைந்து கொண்டதில் சற்றுச் சலனப்பட்டிருந்தது.
மகேஷின் வீட்டில் மஞ்சள் நிறம் பாய்ச்சிய மின் குமிழ் விளக்கு வீட்டின் அறையைத் தாண்டி வீதிக்குள் வழிந்திருந்தது. குத்துகால் இட்டு அமர்ந்திருந்த அம்மணியம்மாள், அந்த தெருக் கூட்டத்தின் நடுவில் எதோ தேடிக் கொண்டிருந்தாள்.
மகேஷ் ஒரு பொறியியல் பட்டதாரி வருடக்கணக்கில் தான் தேடிக் கொண்ட பணி மன நிறைவைத் தராததால், தனக்கான வேலையத் தேடித் திரிந்தான். எதோ ஒரு காரணத்திற்காக மணம் முடிக்காமலும் இருந்தான். அவன் தாயுடன் வாழ்வைக் கழிப்பது என வாழ்ந்துக் கொண்டான்.
கொரோனா முற்றிலுமாக அந்த மாவட்டத்தை வியாபித்துக் கொண்டிருந்த சமயம். தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியமர்த்தப்பட்டான். தினமும் பாதிக்கப்பட்ட நோயாளிகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கும், வீட்டுக்கும் அலைந்து கொண்டிருந்தான்.
தினமும் தான் எதிர்கொள்ளும் சவால்களையும், தோல்விகளையும் தன் தாயுடன் இரவு நேரங்களில் அளவளாவிக் கொண்டிருப்பான். பலர் காப்பாற்றப் படுவதும் உண்டு, சமயங்களில் மரணங்கள் சஞ்சரிப்பதும் உண்டு .
வாழ்வில் ஒரு பிடிப்பை நன்கு ஏற்படுத்தி இருந்தது இந்த பணி. ஒவ்வொரு நாளும் அன்று அறம் கொண்டதாய் மனம் துயில் கொள்ளும்.
ஒரு முறை தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் அங்கு விரைந்தான் வீட்டில் யாருமற்று அனாதையாய் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்தவரை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்தவன், மருத்துவ உதவி கொடுத்தவர்களின் கோரிக்கையைக் கேட்டு சற்று அதிர்ந்து கொண்டான்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை ,வாகனத்தில் இருந்த சிலிண்டரில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இல்லாததால் அந்த உயிரைக் காப்பாற்றும் பொறுப்பு அவனிடம் விழுந்தது.
வாகனத்தை மிக வேகமாக விரட்டினான், கைபேசியில் இருந்த ஆக்ஸிஜன் டிமாண்ட் என்ற வாட்ஸ்ஆப் குழுவில் தன் தேவையை பதிவு செய்தான். அதோடு நிற்காமல் சிலிண்டர் தட்டுப்பாட்டை கிடைக்கின்ற இடங்களிலெல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தான்.
எங்கிருந்தும் பதில் வரவில்லை, வாகனத்தில் ஆக்ஸிஜனுக்கு போராடிக் கொண்டிருந்தவரின் முனகல், நொடிக்கொருமுறை இவனை வதைத்துக் கொண்டிருந்தது.
வழியில் மரணங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மருத்துவமனை நுழைவாயிலை அடைத்துக் கொண்டிருந்தது. மரணங்கள் சமீபத்தில் மனிதர்களுக்கு பரிச்சியமானதாய் தெரிந்தாலும் மனங்களுக்குள் இருக்கும் வீரியம் சற்றும் குறைந்த பாடில்லை.
தன் கண்களிலும் மரண பயம் கொப்பளித்தது. தீடிரென வாட்ஸ் ஆப் குழுமத்தில் இவனுக்கு சாதகமாக குறுந்தகவல் ஒன்று முளைத்தது. சற்று நிதானித்தவன் ஆக்ஸிஜன் இருக்கும் விலாசத்திற்கு விரைந்து பெரியவரை ஒப்படைத்தான் .
இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இக்கட்டான சூழ்நிலைகளில் மாட்டிக் கொள்வதுண்டு. அப்படியொரு சூழலில் எண்பது வயது கருப்பாத்தாளை மரணத்தின் பிடியிலிருந்து மீட்க முடியாமல் போனது.
அதை எண்ணி ஒருவாரமாக அவன் பணிக்கு திரும்பாமல் இருந்தான். தொற்று காரணமாக, சிறிது காலம் அவன் தாயை பக்கத்தில் இருந்த அவர்களது உறவினர்கள் வீட்டில் விட்டு வந்தான்.
தன்னை பற்றிக் கவலை கொள்ளாதவன் ஒரு நாள் கொரோனாவின் கோரப்பிடியில் அகப்பட்டான். ஏற்கனவே சுவாசக் கோளாறு இருந்தமையால் , அவனுக்கு தொற்று அதிவேகத்தில் ஆட்கொண்டது.
ஆக்ஸிஜன் சாச்சுரேஷன் குறைந்து கொண்டே வந்தது, இருப்பில் இருக்கும் ஆக்ஸிஜன் தீர்ந்திருந்த நிலையில் அன்று அவனுக்கென்று ஆக்ஸிஜனுக்காக அலைமோத ஒருவர் கூட வரவில்லை.
ஸ்ட்ரெச்சரில் நீல் வரிசையில் மருத்துவமனை நோக்கி நின்றுக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்றில் கடைசி நபராக உயிர் வேண்டி யாசித்திருந்தான்.
பூமி முழுவதும் படர்ந்திருந்த ஆக்ஸிஜன், தன் உடல் ஏற்றுக் கொள்ளாததை எண்ணி நொந்து கொண்டான். செயலியை கூட இயக்க முடியாத நிலையில் இருந்தான். யாரை உதவிக்கு அழைப்பது என்று தெரியவில்லை, கடப்பவர்கள் எல்லோரும் அச்சத்தை முகக்கவசத்தோடு அணிந்து கொண்டு கடந்தார்கள்.
கைகளை ஆட்டிப் பார்த்தான்… கத்திப் பார்த்தான்… ஒன்றும் பெரிதாக நடந்து விடவில்லை. தன் முன் அனைத்தும் இருட்டிக்கொண்டு வந்தது. தொண்டை விக்கியது… மரணத்தின் வாசம் மெல்ல அவன் மேல் படர்வதை உணர்ந்தான்.
வேகம் இழந்த இருதயம் நிற்பதற்கு தயாரானது. சட்டென்று நொடிகள் இறந்து கொண்டது. வெகுநேரமாய் தெருவைப் பார்த்த அம்மணியம்மாளின் கண்களின் விழித்திரையில் ஆம்புலன்ஸ் ஒன்று ஆடி அசைந்து மெதுவாக வீதிக்குள் வந்தது.
கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்த வாகனம் மகேஷின் வீட்டருகில் நின்றது. உள்ளிருந்து கவச உடை அணிந்திருந்தவர்கள் குளிர் பெட்டியை இறக்கினார்கள். அதில் பத்திரமாக மகேஷ் பூட்டப் பட்டிருந்தான்.
அம்மணியம்மாள் எந்த ஒரு சலனமில்லாமல் ஓரமாக நின்றுகொண்டு மகேஷை பார்த்திருந்தாள்…
காற்று பலமாக அடித்தது… அதில்… ஆக்ஸிஜன் இருக்கும் என்பது அறிவியலின் தகவல்…
– சன்மது
நன்றி : கீற்று இணையம்