(8) திருக்குறள்:- சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருவள்ளுவர் (கி.மு.31) யாத்த திருக்குறளில் ‘மனத்தக்க மாண்புடையள்’ (51) என்றும், ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்’ (54) என்றும், ‘தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்’ (55) என்றும், ‘கனங்குழை மாதர்’ (1081) என்றும், ‘பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு’ (1089) என்றும், ‘இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது’ (1091) என்றும், ‘கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள.’ (1101) என்றும், ‘அணியிழை’ (1102) என்றும், ‘இவள் நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்’ (1104) என்றும், ‘காமம் செறிதோறும் சேயிழை மாட்டு’ (1110) என்றும், ‘நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்’ (1111) என்றும், ‘முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு’ (1113) என்றும், ‘மலரன்ன கண்ணாள்’ (1119) என்றும், ‘அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்’ (1120) என்றும் பெண்கள் பெருமை பேசப்படுகின்றது
.(9) நாலடியார்:- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரில் ‘அறுசுவையுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட’ (1-1) என்றும், ‘மனையாள்’ (3-4) என்றும், ‘முல்லை முகைமுறுவல் முத்தென்றும்’ (45-1) என்றும், ‘நிரைதொடீஇ’ (111-3) என்றும், ‘இனியார் தோள்’ (338-3) என்றும், ‘பூங்குழையார்’ (370-1) என்றும், ‘கொய்தளிர்’ (373-3) என்றும், ‘அரும்பெறற் கற்பின்’ (381-1) என்றும், ‘நறுநுதலாள்’ (381-4) என்றும், ‘மாதர் மனைமாட்சியாள்’ (382-4) என்றும், ‘மாண்கற்பின் இல்லாள் அமர்ந்ததே இல்’ (383-3,4) என்றும், ‘கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள், உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், உட்கி இடன் அறிந்து ஊடி யினிதின் உணரும;, மடமொழி மாதராள் பெண்.’ (384) என்றும், ‘சுடர்த்தொடீஇ’ (398-2) என்றும் பெண்ணழகு பேசப்படும் சீர் இவையாம்.
(10) நான்மணிக்கடிகை:- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகையில் ‘பெண்மை நலத்துக்கு அணியென்ப நாணம்’ (11-2,3) என்றும், ‘நிலைநின்ற பெண் நன்று’ (15-1,2) என்றும், ‘மனைக்காக்கம் மாண்ட மகளிர்’ (20-1) என்றும், ‘மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை’ (22-1) என்றும், ‘தாயின் சிறந்த தமரில்லை’ (35-2) என்றும், ‘தாயென்பாள் முந்துதான் செய்த வினை’ (45-3,4) என்றும், ‘உருபோடு அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப’ (55-2,3) என்றும், ‘கொடுங்குழை நல்லாரை நல்லவர் நாணுவப்பர்’ (56-2,3) என்றும், ‘ஈன்றாளோடெண்ணக் கடவுளு மில்’ (57-3,4) என்றும், ‘பேணிய நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர்’ (90-2,3) என்றும், ‘பாழொக்கும் பண்புடையாள் இல்லா மனை’ (101-3,4) என்றும், ‘மனைக்கு விளக்கம் மடவார்’ (105-1) என்றும் பெண் புகழ் பாடப்படுகின்றது.
முடிவுரை
இதுவரை தொல்காப்பியம;, குறுந்தொகை, கலித்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை ஆகிய பத்துச் (10) சங்க இலக்கிய நூல்களில் பெண் பெருமை பேசும் பாங்கினைப் பார்த்தோம். அவற்றில் பெண்ணை- மனைவி, கிழத்தி, காமக் கிழத்தி, நல்லோள், காதலி, கிழவி, கிழவோள், பேடை, பெட்டை, பெடை, பெண், பாட்டி, தோழி, செவிலி, விறலி, பரத்தை, ஒண்டொடி மாதர், அரிவை, வாலிழை மகளிர், மகளிர், ஒளியிழாய், நறுநுதால், சுடர்த்தொடீஇ, திருந்திழாய், நெட்டிருங் கூந்தலாள், நன்னுதால், கொய்தளிர் மேனியர், சுடர்நுதல் குறுமகள், மடமகள், அணிஇழையாள், கூந்தல் விறலியர், வளைமகள், மெல் இயல் மகளிர், சில் வளை விறலி, மனைமாண் இனியோள், பொற்றொடி மகளிர், தென் தமிழ்ப் பாவை, கற்பின் கொழுந்தே!, பொற்பின் செல்வி, கனங்குழை மாதர், நறுநுதலாள், இல்லாள், கட்கினியாள், தாயென்பாள், நற்பெண்டிர், பண்புடையாள், ஈன்றாள், மடவார், நிலைநின்ற பெண், இனியார் தோள் போன்ற சொற்பதங்களை அடக்கிச் சங்க இலக்கிய நூல்களில் பாடல் சமைத்தமை சங்கப் புலவர்கள் மனித வாழ்வியலின் உச்ச நிலையை மனத்தில் பதித்துச் செயற்பட்டனர் என்பது தௌ;;ளத் தெளிவாகின்றது.
ஆண், பெண் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து செயற்படின் அவர்கள் வாழ்வியல் சிறந்தோங்கும் என்பதில் ஐயப்பாடேதும் இருக்காது. வாழ்க்கைக்குப் பெண்ணின் பங்கு மிகவும் முக்கியம் என்பதை யாவரும் ஏற்பர். அதை அன்றே சங்கப் புலவர்களும் அறிந்திருந்து பெண்கள் பெருமையும், சீரும், சிறப்பும் பேசிப் பாடல்கள் யாத்தனர் போலும். இப்பாடல்கள் இரண்டாயிரத்து ஐநூறு (2500) ஆண்டுகளாக மக்கள் மத்தியிற் பெண் பெருமை பேசிக்கொண்டு உயிருடன் உலாவி வரும் சீரினையும் காண்கின்றோம்.
நிறைவு பெற்றது….
நன்றி : பதிவுகள் | பெண்ணியம்