கர்நாடக இசையின் ஜாம்பவான்களும், சங்கீதக் கலை வல்லுனர்களும் நிறைந்த இசைக் குடும்பத்தில் பிறந்து, இசையென்னும் காற்றை சுவாசித்து, வளர்ந்து, தனது 16வது வயதிலேயே இசைக் கச்சேரியை அரங்கேற்றியவர், நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள். இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய சபாக்களிலும் பாடிய அவர், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா என உலகம் முழுவதும் பல நாடுகளில் கச்சேரிகள் நிகழ்த்தி, தமிழ் இசையின் பெருமையைப் பரப்பியவர். கர்நாடக சங்கீத வல்லுனராக மட்டுமல்லாமல், பக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், சினிமா பாடல்கள் என நூற்றுக்கணக்கானப் பாடல்களைப் பாடிய அவர், இந்தியா சுதந்திரம் அடைந்து 5௦ ஆண்டுகள் நிறைவடைந்த கொண்டாட்டத்தை வெளிபடுத்தும் விதமாகப் பல தேசபக்திப் பாடல்களைக் கச்சேரிகள் ஒருங்கிணைத்து பாடியுள்ளார். “கலைமாமணி விருது”, ‘பெஸ்ட் கான்செர்ட் விருது’, ‘பெஸ்ட் பெர்ஃபாமிங் ஆர்டிஸ்ட்’, ‘பத்ம சாதனா’, ‘நாத கோவிதா’, ‘இசைக்கனல்’, ‘கானம்ரிதாகலாரசனா’, ‘சுனதாவிநோதினி’, ‘இசைக்கலைத் தாரகை’, ‘யுவா கலா பாரதி’, ‘இன்னிசை மாமணி’, ‘வசந்தகுமாரி நினைவு விருது’ என எண்ணிலடங்கா விருதுகளையும், பட்டங்களையும் தனது இசையுலகில் வென்ற அவர், தமிழ்த் திரையுலகில் ஏ. ஆர். ரகுமான் அவர்களால் ‘ஜீன்ஸ்’ என்ற படம் மூலமாக 199௦ ஆம் ஆண்டில் கால்பதித்தார். தனது குரல்வளத்தால் பல ரசிகர்களைக் கவர்ந்த நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது வெற்றிகரமான இசையுலகப் பயணத்தைப் பற்றி விரிவாக அறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஆகஸ்ட் 25, 1973
பிறப்பிடம்: திருவையாறு, தமிழ்நாடு, இந்தியா
பணி: கர்நாடக இசைப்பாடகி மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் திருவையாறில் லலிதா மற்றும் சிவகுமார் தம்பதியருக்கு மகளாக ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி, 1973 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர், பிரபல கர்நாடக இசைப் பாடகியான டி. கே. பட்டம்மாள் அவர்களின் மகன்வழி பேத்தி மற்றும் மிருதங்க வித்வானான பாலக்காடு மணி ஐயரின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
சங்கீதக் கலை வல்லுனர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்ததால், சங்கீதக் காற்றையே சுவாசித்து வளர்ந்த அவர், தனது தாயாரிடம் சங்கீதப் பயிற்சி மேற்கொண்டார். மேலும், டி. கே. பட்டம்மாளிடம் சங்கீதம் கற்ற அவர், சிறு வயதிலிருந்தே அவரது கச்சேரிகளில் பங்கேற்றார். அவரது தந்தை பாலக்காடு மணி ஐயரின் சிஷ்யன் என்பதாலும், அவரை சங்கீதக் கலையில் மேலும் ஊக்குவித்தார். சங்கீதக் கச்சேரிகளுக்கிடையே தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், வணிகவியலில் தனது இளங்கலைப் பட்டதை எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் பெற்றார்.
இசைப் பயணம்
தனது பதினாறாவது வயதில், ஆகஸ்ட் மாதம் 1௦ ஆம் தேதி, 1987ஆம் ஆண்டில் செம்மொழி இசை இளைஞர் சங்கத்திற்காகப் பாடியதே, அவரது முதல் மேடை கச்சேரியாகும். ஒரு மணி நேரம் நடைபெற்ற இக்கச்சேரியில் மிக முக்கியமான மற்றும் பிரபலமான கர்நாடக சங்கீத இசை வல்லுனர்களான டி. கே. பட்டம்மாள், டி. கே. ஜெயராமன், விஜய் சிவா, ஆர். கே. சிவகுமார், கே. வி. நாராயணஸ்வாமி போன்றோர் முன்னிலையில் நடந்தது. அவரது பாட்டியைப் போலவே, அவரும் பாபநாசம் சிவன் மற்றும் கோபாலகிருஷ்ண பாரதி அவர்களின் பாடல் தொகுப்புகளை மேடையில் பாடினார். பாபநாசம் சிவன் அவர்களின் இசைத் தொகுப்புகளைத் தொகுத்து இரண்டு ஆல்பங்களாக வெளியிட்ட அவர், ‘பாபநாசம் சிவன் – எ லெஜென்ட்’ என்ற தலைப்பில் ஒரு விரிவுரையும் கோவையில் கொடுத்துள்ளார். கோபாலகிருஷ்ண பாரதி அவர்களின் இசைத் தொகுப்புகளைத் தொகுத்து இரண்டு ஆல்பங்களாக வெளியிட்ட அவர், கோவையில் உள்ள பி.எஸ்.ஜி அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் அவரது வாழ்க்கை மற்றும் கலைக்காக அவரது அற்பணிப்பு பற்றிய உரையை அங்குள்ள இசைத்துறைக்கு வழங்கியுள்ளார்.
இசை மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக அவர் 1௦௦க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய சபாக்களிலும் பாடிய அவர், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா என உலகம் முழுவதும் பல நாடுகளில் கச்சேரிகள் நிகழ்த்தி, தமிழ் இசையின் பெருமையைப் பரப்பியவர். கர்நாடக சங்கீத வல்லுனராக மட்டுமல்லாமல், பக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், சினிமா பாடல்கள் என நூற்றுக்கணக்கானப் பாடல்களைப் பாடிய அவர், இந்தியா சுதந்திரம் அடைந்து 5௦ ஆண்டுகள் நிறைவடைந்த கொண்டாட்டத்தை வெளிபடுத்தும் விதமாகப் பல தேசிபக்திப் பாடல்களைக் கச்சேரிகள் ஒருங்கிணைத்து பாடியுள்ளார்.
திரையுலக வாழ்க்கை
1990 ஆம் ஆண்டில், ஏ. ஆர். ரகுமான் அவர்கள் ‘ஜீன்ஸ்’ படத்தில் அவரைத் திரைப் பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்தினார். திரையுலகில் அவர் பாடிய முதல் பாடலான ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ என்ற பாடல், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், அவர் தொடர்ந்து ‘மின்சாரக் கண்ணா’ (படையப்பா), ‘சௌக்கியமா கண்ணே சௌக்கியமா’ (சங்கமம்), ‘மன்மத மாசம்’ (பார்த்தாலே பரவசம்), ‘கும்பகோணம் சந்தையிலே’ (நியூ), ‘ஒரு நதி ஒரு பௌர்ணமி (சாமுராய்), ‘கனா காண்கிறேன்’ (ஆனந்த தாண்டவம்), ‘தாய் தின்ற மண்ணே’ (ஆயிரத்தில் ஒருவன்) போன்ற பல பாடல்களைத் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் பாடியுள்ளார்.
இல்லற வாழ்க்கை
மகாதேவன் என்பவரை மணந்த அவருக்கு, தனுஜாஸ்ரீ மற்றும் தேஜாஸ்ரீ என்று இரு மகள்கள் உள்ளனர். தனது தாயார் மீது அதீத பாசமுடையவராக இருந்த அவரது கணவர், அவரின் மரணத்திற்குப் பின்னர் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால், டிசம்பர் 21 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில் அடையார் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
விருதுகள்
- 1993 – பாரத் கலாச்சார் அவருக்கு, ‘யுவா கலா பாரதி’ பட்டம் வழங்கி கௌரவித்தது.
- 1994 – தமிழ்நாடு நன்மதிப்பு மற்றும் நல சங்கம் அவருக்கு ‘இன்னிசை மாமணி’ பட்டம் வழங்கியது.
- 1997 – சிவகாசி திருப்புகழ் மன்றத்திலிருந்து ‘இன்னிசை ஞான வாரிதி’ பட்டம் பெற்றார்.
- 1998 – ஸ்ரீ ராகம் ஃபைன் ஆர்ட்ஸ் அவருக்கு ‘வசந்தகுமாரி நினைவு விருது’ வழங்கியது.
- 1998 – ஆன்மீகப் பேரவையிடமிருந்து ‘நவரச கான நாயகி’ பட்டம்.
- 1999 – தமிழ்நாடு அரசு அவருக்கு “கலைமாமணி விருது” வழங்கி கௌரவித்தது.
- 1999 – சென்னையில் உள்ள ஆந்திர சமூக மற்றும் கலாச்சார கிளப் அவருக்கு “சங்கீத சிகாமணி” பட்டம் வழங்கியது.
- 1999 – சென்னை தெலுங்கு அகாடமியிலிருந்து ‘உகாதி புரஸ்கார் விருது’ பெற்றார்.
- 1999 – ‘கானம்ருத வாணி” என்று அனைத்து இலங்கை இந்து மதம் காங்கிரஸ் அவருக்குப் பட்டம் சூட்டியது.
- 2001 – ‘இசைப் பேரொளி’ என்ற பட்டத்தை, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் மூலமாகப் பெற்றார்.
- 2007 – ஜேப்பியாரின் சத்தியபாமா பல்கலைக்கழகம் அவருக்கு ‘கெளரவ டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.
மேலும் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் நடந்த சர்வதேச இசை விழாக்களில் ‘சங்கீத நாடக அகாடமி விருதுக்காக’ இருமுறை பங்கேற்ற அவர், ‘பெஸ்ட் கான்செர்ட் விருது’, ‘பெஸ்ட் பெர்ஃபாமிங் ஆர்டிஸ்ட்’, ‘பத்ம சாதனா’, ‘நாத கோவிதா’, ‘இசைக்கனல்’, ‘கானம்ரிதாகலாரசனா’, ‘சுனதாவிநோதினி’, ‘இசைக்கலைத் தாரகை’ போன்ற பல விருதுகளையும், பட்டங்களையும் வென்றுள்ளார்.
நன்றி : itstamil.com