திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் தாமரை நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனது கணவர் தியாகு வீட்டைவிட்டு வெளியேறியபிறகு, நான் தனிமையில் இருப்பதை தெரிந்துகொண்டு எனக்கு பல வழிகளில் மிரட்டல் வருகிறது. மர்ம நபர்கள் எனது வீட்டை சுற்றுகிறார்கள். நானும், எனது மகனும் வீட்டுக்குள் இருக்கும்போதே, வீட்டை வெளியில் பூட்டிவிட்டனர். நான் போலீசுக்கு தகவல் கொடுத்தேன். போலீசார் வந்து பூட்டை உடைத்து என்னையும், எனது மகனையும் மீட்டனர்.
இதுதொடர்பாக கோடம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன். அதன்பிறகு போலீசார் தினமும் இரவு எனது வீடு உள்ள பகுதியில் ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பேஸ்புக்கில் எனக்கு அவதூறு ஏற்படுத்திடும் வகையில் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு ஆபாச தகவல்களை அனுப்புகிறார்கள். செல்போனில் பேசி மிரட்டுகிறார்கள்.
பேஸ்புக்கில் ஆபாச தகவல்கள் அனுப்புபவர்கள் 3 பேரை நான் அடையாளம் கண்டுள்ளேன். அவர்களில் இருவர் யார் என்று படத்துடன், சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் துணை கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளேன். கமிஷனரையும் நேரில் சந்திக்க உள்ளேன். எனக்கு மிரட்டல் விடுத்துள்ள இருவரில் ஒருவர் வெளியூரில் இருக்கிறார். மற்றொருவர் வெளியூரைச் சேர்ந்தவராக இருந்தாலும், சென்னையில் தான் வசிக்கிறார்.
அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுள்ளேன். திரைப்படத்துறையில் இருந்து இதுபோன்ற மிரட்டல்கள் எனக்கு வரவில்லை. போராளி அரசியல்வாதிகளிடம் இருந்துதான் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. எனது கணவர் வீட்டைவிட்டு வெளியேறியபோது நான் நடத்திய போராட்டத்தை உடனே நிறுத்த சொல்லி, அமிலத்தை என் மீது ஊற்றிவிடுவதாக கூட மிரட்டினார்கள்.
எனக்கும், எனது கணவருக்கும் உள்ள பிரச்சினை குறித்து 6 பேர் அடங்கிய குழுவினர் விசாரணை தொடங்கி உள்ளனர். எனக்குள்ள இந்த பிரச்சினையில் போலீசார் எடுக்கும் நடவடிக்கை, மற்ற பெண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். நான் எனது தனிப்பட்ட பிரச்சினைக்காக மட்டும் போராடவில்லை. என்னைப்போல மற்ற பெண்களுக்கு பிரச்சினை வந்தபோது கூட நான் உதவி செய்துள்ளேன்.
இவ்வாறு கவிஞர் தாமரை தெரிவித்தார்.