மகனே…!
இந்தக் கஞ்சியை அருந்து!
கீழே பருத்து வளைந்து
மேலொடுங்கும்,
அழகிய வெண்கலப் பானையில்,
தூய நீரும்,
கழுவிய அரிசியும்
தானிய மணிகளும்,
சத்திலைகளும் கலந்தோ
அல்லது
சர்க்கரையும் பாலும் கலந்தோ…
பக்குவமாய் ஆக்கியதல்ல
இந்தக் கஞ்சி!
ஆயினும் மகனே…!
இனிவரும் முக்காலமும்
இதை நீ அருந்து…!
சிறுதுளையில் நீர் பீச்சிடும்,
ஷெல் எறிந்த மண் அப்பி
நாலுபுறமும் சளிஞ்சொடுங்கும்
புகை அப்பிய பானையில்,
எம்மவரின் குருதி கலந்த
கடல் நீரும் கண்ணீரும் நிரம்ப,
பிணங்கள் குவிந்த
ஒரு வாய்க்காலின் கரையில்,
பெரும் சுவாலை எழுந்து தின்ற
ஓர் ஊழியின் முடிவு காலத்தில்,
நான் காய்ச்சிய கஞ்சியை,
மகனே…
நீ என்றென்றைக்குமாய் அருந்து!
உன் அண்ணாவின் மூளை
சிதறி வெளியேறி,
கருகிய மண் புழுதியில்
நிணமூறி வடிந்தவாறும்,
கைகளும் கால்களுமற்ற
அக்காவின் உடல்,
ரத்தச் சேறாடையோடு
நீந்தியவாறும்,
பாதி ஆடையுடன்
பயம் சுரக்கும்,
என் பாலூறாத முலைக்காம்பில்,
நீ பால் குடித்தவாறும் இருந்தபோது…
மகனே!
என்னிடம் என்னதான் இருந்திருக்கும்?
இலையான்கள் மொய்க்கும்
உன் அப்பாவின்
பிணத்தைத் தவிர,
என்னருகில் என்னதான்
இருந்திருக்கும்?
அப்போது…
என் கஞ்சியில்
எதுவும் இல்லாதது போல,
என் உயிரில்
என் சொற்களில்
என் குருதியில்
எதுவும் இருக்கவில்லைத்தான்!
எனினும்…
உனதும் எனதுமான
ஒரு சொட்டு உயிருக்காய்,
உப்புக் கடலுக்கருகில் உப்பில்லாத,
உன் சிறுகையளவும் கொள்ளாத
அரிசியுமின்றி,
மரணத்தருவாயில்
அன்று
நான் காய்ச்சிய கஞ்சி!
இந்தக் கஞ்சியில்…
உப்பும் இல்லை
புளியும் இல்லை
சுவையும் இல்லை
ஆயினும் என்ன
என் மகனே!
எனதும் உனதுமான
வாழ்வும் வீழ்வுமான வரலாறு
அதிலேதான் இருக்கிறது!
ஆகவே மகனே!
வரலாறு முழுவதும்
இதை அருந்து!
—————————————
மே 18, 2022